இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதிகளின் பாதுகாப்பான புகலிடமாகக் கனடா மாறிவிட்டது என்று தொடர்ந்து இந்திய அரசு குற்றம் சாட்டி வரும் நிலையில், இப்போது கனடாவை ஒரு தளமாகக் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்புகள் பயன்படுத்துகின்றன என்று அந்நாட்டு அரசு ஒப்புக் கொண்டுள்ளது. இந்த அமைப்புகள் எப்படி நிதி திரட்டுகிறது ? எப்படிப் பயங்கரவாத செயல்களைத் திட்டமிடுகிறது ? என்பதையும் கனடா அரசின் அறிக்கை விரிவாக விளக்கியுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
நிதி மோசடி மற்றும் பயங்கரவாத நிதி அபாயங்கள் குறித்த இந்த ஆண்டுக்கான மதிப்பீட்டு அறிக்கையை கனடா அரசின் நிதி துறை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில், Babbar Khalsa International மற்றும் International Sikh Youth Federation ஆகிய காலிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளை அரசியல் ரீதியாகச் செயல்படும் வன்முறைத் தீவிரவாதம் (PMVE) என்ற பிரிவின் கீழ்க் கனடா அரசு பட்டியலிட்டுள்ளது.
இந்தியாவில் தடை செய்யப்பட்ட இந்தப் பயங்கரவாத அமைப்புகள், இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதத்தை ஆதரிப்பதற்காகத் தொண்டு நிறுவனங்கள் என்ற பெயரில் நிதி நெட்வொர்க்குகளைத் தவறாகப் பயன்படுத்தி வருகின்றன.
வங்கிகள், கிரிப்டோகரன்சிகள், அரசு ஆதரவு மற்றும் தொண்டு நிறுவனங்களைப் பயன்படுத்தும் ஹமாஸ், ஹிஸ்புல்லா போலவே, காலிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளும் அதே வழிகளில் நிதி திரட்டுவதாகவதாகவும், புலம்பெயர்ந்த சீக்கியர்களிடமிருந்தும் நன்கொடைகளைப் பெறுவதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே இதையெல்லாம் கனடாவின் சட்ட அமலாக்க மற்றும் புலனாய்வு பிரிவினர் கண்டுபிடித்து அறிக்கையாகக் கொடுத்துள்ளனர் என்றும் அரசின் நிதித்துறை அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.
மேலும்,1980 களிலிருந்து பெரும்பாலும் கனடாவில் இயங்கும் காலிஸ்தான் பயங்கரவாதிகளிடமிருந்து இந்தியாவுக்கு அச்சுறுத்தல் வருகிறது என்றும், இந்தியாவின் பஞ்சாபில் காலிஸ்தான் என்ற தனி நாட்டை பயங்கரவாதத்தின் மூலம் ஏற்படுத்துவதே அவர்களின் நோக்கம் என்றும் கனடா அரசு தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், கனடாவின் உயர்மட்ட உளவுத்துறை நிறுவனமான கனடா பாதுகாப்பு புலனாய்வு சேவைல காலிஸ்தான் பயங்கரவாதிகள் இந்தியாவில் வன்முறையை ஊக்குவிக்கவும், நிதி திரட்டவும், திட்டமிடவும் கனடாவை ஒரு தளமாக பயன்படுத்துவதாக ஒப்புக்கொண்டது.
வெளிநாட்டுச் செல்வாக்கு மற்றும் உள்நாட்டுப் பயங்கர வாத நிதி நெட்வொர்க்கள் ஆகியவற்றை இரண்டையும் கடுமையாகக் கண்காணிக்க வேண்டும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும், காலிஸ்தான் பயங்கரவாத அபாயங்களைக் கருத்தில் கொண்டு, முழுமையாக மதிப்பீடு செய்து நடவடிக்கை எடுக்கக் கனடா அரசுக்கு இந்த அறிக்கைப் பரிந்துரை செய்துள்ளது.
முன்னதாக, இந்தியாவால் தேடப் படும் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்திப் சிங் நிஜ்ஜார் 2023-ல் கனடாவில் கொலைச் செய்யப்பட்டார். இந்தக் கொலையில் இந்திய அரசுக்குத் தொடர்பு இருப்பதாக முன்னாள் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியதைத் தொடர்ந்து, இந்திய தூதரக அதிகாரிகளை கனடா அரசு வெளியேற்றியது. இந்தியாவும் கனடாவின் 6 மூத்த தூதரக அதிகாரிகளை வெளியேற்றியது.
இந்தச் சூழலில், கனடாவில் பிரதமர் மார்க் கார்னியின் ஆட்சிக்கு வந்ததிலிருந்து, இந்தியாவுடனான உறவைச் சீரமைக்க முயற்சிகள் எடுக்கப்பட்டுவருகிறது . கடந்த ஜூனில் கனடா பிரதமர் மார்க் கார்னி மற்றும் பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசியதை தொடர்ந்து, இரு நாடுகளும் தூதர்களை புதிதாக நியமிக்க ஒப்புக்கொண்டனர்.
கடந்த மாதம், கனடா தனது புதிய இந்திய தூதராக கிறிஸ்டோபர் கூட்டரை (Christopher Cooter) நியமித்தது.தொடர்ந்து, இந்தியாவும் கனடாவுக்கான தனது புதிய தூதராகத் தினேஷ் பட்நாயக்கை நியமித்துள்ளது.
இந்நிலையில்,காலிஸ்தான் பயங்கர வாதத்தை கனடா ஒப்புக்கொண்டுள்ளது. இருநாட்டின் உறவுகள் மேம்படுவதற்கான நல்ல அறிகுறியாக இது பார்க்கப்படுகிறது.