தென்கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை, ட்ரம்ப் நிர்வாகம் உளவு பார்க்க முயன்று தோல்வியைத் தழுவியது தற்போது தெரிய வந்துள்ளது. இது குறித்த செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம்.
வடகொரியா தொடக்கம் முதலே ஒரு மர்மமான நாடாக இருந்து வருகிறது. அங்கு என்ன நடக்கிறது?, அங்குள்ள தலைவர்கள் என்ன செய்கிறார்கள்?, ஆட்சி எவ்வாறு நடைபெறுகிறது? என்பது குறித்த எந்தத் தகவலையும் அத்தனை லேசில் நம்மால் தெரிந்துகொள்ள முடியாது.
அவ்வபோது ஏவுகணைகளை செலுத்தி அந்நாடு சோதனை செய்யும். தென்கொரியாவுடன் ஏதாவது வம்பிழுக்கும். ரஷ்யாவுடனோ, சீனாவுடனோ ஆயுத வர்த்தகம் மேற்கொள்ளும். இந்த அளவிலான செய்திகள் மட்டும்தான் ஊடகங்களில் வெளியாகும். மற்ற விஷயங்கள் எல்லாம் பரம ரகசிமாகவே இருக்கும்.
வடகொரியாவில் என்ன நடக்கிறது என்பதை அறிவதே குதிரை கொம்பான விஷயம் என்றால், அதன் அதிபர் கிம் ஜாங் உன் என்ன செய்கிறார் என்பதை அறிவது எல்லாம் நடக்காத காரியம். ஆனால், அந்தக் காரியத்தை நடத்தி முடிக்க முயன்று ட்ரம்ப் மண்ணை கவ்விய செய்தி தற்போது வெளியே கசிந்துள்ளது.
2019ம் ஆண்டு முதன்முறையாக டிரம்ப் வடகொரியா சென்று கிம் ஜாங் உன்னை சந்தித்தார். அமெரிக்க அதிபர் வடகொரியா செல்வது அதுவே முதல்முறை. தனது பயணத்திற்கு முன்னதாக, கிம் ஜாங் உன்னை உளவறிய முடிவெடுத்தார் டிரம்ப்.
ஆனால், அது அத்தனை எளிதான காரியம் இல்லை என்பது அவருக்கும் தெரியும். எனவே, இந்தத் திட்டத்தை வெற்றிகரமாகச் செய்து முடிக்க seal team 6-ஐ களமிறக்கினார். காதும் காதும் வைத்ததுபோல் செய்து முடிக்க வேண்டிய காரியங்களை இந்த seal team 6 அமைப்பிடம்தான் அமெரிக்க அதிபர்கள் ஒப்படைப்பார்கள்.
ஆனானப்பட்ட ஒசாமா பின்லேடனை பாகிஸ்தானுக்குள் புகுந்து கதையை முடித்ததே இந்த seal team 6 அமைப்புதான். இதில் இருந்தே இந்த அமைப்பின் ஆற்றலை புரிந்துகொள்ளலாம். இந்த அமைப்பின் வீரர்கள் வடகொரிய அதிபரை உளவறியும் மிஷனை செய்து முடிக்க ஒப்புக்கொண்டனர்.
அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கி கப்பல் மூலம் வடகொரிய எல்லைக்கு முதலில் செல்ல வேண்டும். பின்னர், சிறிய கப்பல்கள் மூலம் வடகொரியாவுக்குள் பயணிக்க
வேண்டும். அங்கு குறிப்பிட்ட இடங்களில் ஒட்டுகேட்பு கருவிகளை பொருத்த வேண்டும். இதுதான் ப்ளேன்.
திட்டமிட்டபடியே seal team 6 வீரர்கள் வடகொரிய கடற்பகுதிக்குச் சென்றனர். அப்போது எதிர்பாராத விதமாகக் கப்பல் ஒன்று வந்துவிட்டது. அதனை வடகொரிய கடற்படையின் கப்பல் எனக் கருதிய அமெரிக்கப் படையினர் கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச்சூடு நடத்தி, கப்பலில் இருந்த அனைவரையும் கொன்று குவித்தனர்.
உடல்கள் மிதக்காமல் இருக்க, கொல்லப்பட்டவர்களின் நுரையீரல்களை கிழித்து கடலில் மூழ்கடித்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் அமெரிக்கா திரும்பிவிட்டனர். திட்டம் படுதோல்வி.
இன்றைக்கு இருப்பது போன்ற மேம்பட்ட தொல்நுட்ப வசதிகள் அமெரிக்க வீரர்களுக்குக் கிடைக்கவில்லை. இது தவிர்த்துத் தெளிவான செயற்கைக்கோள் புகைப்படம் இல்லாததால், இலக்கை கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டது. திட்டம் தோல்வியடை இதுவும் முக்கிய காரணமாக அமைந்தது.
பின்னர்தான் தெரிந்தது, அந்தக் குறிப்பிட்ட கப்பலில் வந்தவர்கள் சாதாரண குடிமக்கள் என்பது. குடிமக்களைதான் அமெரிக்க வீரர்கள் கொன்று குவித்திருந்தனர். இது நடந்தது 2019ம் ஆண்டு.
அமெரிக்காவின் உளவு முயற்சி தோல்வியடைந்த செய்தி 6 வருடங்கள் கழித்து தற்போதுதான் வெளியே கசிந்துள்ளது. மேலும், பொதுமக்களை கொன்ற அமெரிக்காவின் செயலுக்குக் கண்டனமும் வலுத்து வருகிறது.