வர்த்தகப் பேச்சுவார்த்தையில் முட்டுக் கட்டை, 50 சதவீத வரிவிதிப்பு என இந்தியா மீதான ட்ரம்பின் நடவடிக்கைகளை GST 2.0 மூலம் இந்தியா எப்படி முறியடித்தது என்பதைப் பற்றிய ஒரு செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.
மற்ற நாடுகள் மீதான ட்ரம்பின் வரிவிதிப்பு, இந்தியா மற்றும் பிரேசில் ஆகிய இரு நாடுகளையே அதிகம் பாதிப்பை ஏற்படுத்தும் என்று பரவலாகப் பேசப்படுகிறது. பிரேசிலுக்கான அமெரிக்காவின் வரி விதிப்பு, வர்த்தகத்தை விட அரசியல் பழிவாங்கல் என்று கூறப்படுகிறது. ஆனால், ட்ரம்பின் வர்த்தக நிபந்தனைகளுக்குப் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ஒப்புக் கொள்ளாததே இந்தியாவின் மீதான 50 சதவீத வரி விதிப்புக்கு காரணம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியா எப்படி அமெரிக்காவின் வரி விதிப்பைச் சமாளிக்கப் போகிறது ? என்ற கேள்வி பல்வேறு தரப்பில் இருந்தும் எழுப்பப்பட்டன. அமெரிக்காவுக்கும் சரி,கேள்வி எழுப்பியவர்களுக்கும் எந்தப் பதிலும் சொல்லாத பிரதமர் மோடி, இந்த ஆண்டு சுதந்திரத் தின உரையில், நாட்டு மக்களுக்குத் தீபாவளி பரிசாக ஜிஎஸ்டி வரியில் சீர்திருத்தம் வருகிறது என்று அறிவித்தார்.
தொடர்ந்து, நாட்டின் வரி கட்டமைப்பை எளிதாக்கும் வகையில், புதிய இரண்டு அடுக்கு ஜிஎஸ்டி 2.0 செப்டம்பர் 22-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். தேவையான நேரத்தில் மத்திய அரசு எடுத்த சரியான நடவடிக்கை என்றும், இதனால் கிராமப் புற மற்றும் நடுத்தரக் குடும்பங்களுக்கு நேரடியாகப் பயனளிக்கும் என்றும் ஜிஎஸ்டி 2.0 யைப் பொருளாதார வல்லுநர்கள் பாராட்டியுள்ளனர்.
2017-ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி 1.0 ‘ஒரு நாடு, ஒரு வரி’ என்று நாட்டை ஒருங்கிணைத்தது. தற்போது அறிமுகப்படுத்த பட்டுள்ள ஜிஎஸ்டி 2.0 வரி செலுத்துவோரின் வாழ்க்கையை எளிதாக்குவதுடன், நுகர்வு மற்றும் பொருளாதார வளர்ச்சியையும் அதிகரிக்கும் என்று கணிக்கப் பட்டுள்ளது.
இந்தியாவின் பொருட்களின் ஏற்றுமதி மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 11% மட்டுமே. அதேநேரம்,உள்நாட்டு நுகர்வு, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 61 சதவீதம் ஆகும். இந்த GST சீர்திருத்தங்கள் நடப்பு நிதியாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 30 அடிப்படைப் புள்ளிகள் வரை அதிகரிக்கும் என்றும் மதிப்பிடப் பட்டுள்ளது.
நாட்டின் கிராமப்புற நுகர்வு, நகர்ப்புறத்தை விட வேகமாக வளர்ந்துள்ளது. சரியான பருவமழை மற்றும் மேம்பட்ட அறுவடை ஆகியவை இந்தியாவின் கிராமப்புற மக்களின் வாங்கும் சக்தியை அதிகரித்துள்ளன.
எனவே ஜிஎஸ்டி 2.0 சீர்திருத்தம் நாட்டில் ஏற்றுமதியில் ஏற்படும் இழப்பை, உள்நாட்டு நுகர்வால் சீரமைக்கும் என்றும், பொருளாதார வளர்ச்சியை 0.5 சதவீத வரை அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.
உலக நாடுகள் மீதான ட்ரம்பின் பரஸ்பர வரி விதிப்பால், உலகளாவிய வர்த்தகம் நிலையற்றதாக உள்ளது. அதன் விளைவாக ஏற்றுமதி சந்தைகள் நிச்சயமற்றதாக உள்ளது. இந்நிலையில் இந்தியாவில் வரி குறைப்பு வெளிநாட்டு முதலீட்டைத் தக்கவைக்கவும் அதிகரிக்கவும் உதவியுள்ளது.
இதற்கிடையே, மத்திய ரிசர்வ் வங்கி வங்கி, பணப்புழக்கத்தை அதிகரிப்பதற்காக, ரொக்க இருப்பு விகிதத்தில் (Cash Reserve Ratio – CRR) குறைப்பு நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. நான்கு கட்ட குறைப்புகளில் முதல் கட்டம் கடந்த சனிக்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன் மூலம் வங்கிகளுக்கு 70,000 கோடி ரூபாய் வரைக் கூடுதல் பணம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வங்கிகளில் பணப்புழக்கம் அதிகரிக்கும் அதே வேளையில் மக்களுக்கும் கூடுதல் கடன் கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தச் சூழலில், கடந்த ஆகஸ்ட் மாதம் ஐரோப்பாவுக்கான இந்தியாவின் டீசல் ஏற்றுமதி 135 சதவீதம் அதிகரித்துள்ளது. சராசரியாக ஒரு நாளைக்கு 2.42 லட்சம் பீப்பாய்கள் ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி ஆகிறது. முன்னதாக எண்ணெய்யை வாங்கச் சொல்லி இந்தியா யாரையும் கட்டாயப்படுத்தவில்லை என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
நேற்றொரு பேச்சு இன்றொரு பேச்சு என்ற அமெரிக்க அதிபரின் மன நிலைக்கு ஏற்ப எந்தமுடிவும் எடுக்காத பிரதமர் மோடி, உள்நாட்டுப் பொருளாதாரத்துக்கு நிலையான வளர்ச்சி பாதையை வகுத்துள்ளார். விரைவில் ஜிஎஸ்டி 3.0 மேலும் பல சீர்திருத்தங்களைக் கொண்டு வரும் என்றும், நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
ட்ரம்பின் 50 சதவீத வரியை இந்தியா நெருக்கடியாகப் பார்க்கவில்லை. விஸ்கித் பாரத குறிக்கோளுக்கான படியாகப் பார்க்கிறது. அதாவது, 2047 ஆம் ஆண்டு- 100வது இந்திய சுதந்திர நாளில் இந்தியாவை ஒரு வளர்ந்த நாடாக மாற்றும் பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வை உறுதி செய்யப்பட்டுள்ளது.