கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்யும் விவகாரத்தில் அமைச்சரவையின் முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட வேண்டுமா என்பது குறித்து முடிவெடுக்க 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரணைக்கு உயர்நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.
தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பான அரசின் பரிந்துரையை ஆளுநர் நிராகரித்ததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் வி.லட்சுமி நாராயணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஏற்கனவே இந்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தின் இருவேறு அமர்வுகள், இருவேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டது.
ஒரு அமர்வில், அமைச்சரவை பரிந்துரைத்தும் கொடுங்குற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறி
கைதியின் கோரிக்கையை நிராகரிக்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்ததாகவும், மற்றொரு அமர்வில், முன்கூட்டியே விடுதலை செய்ய மறுத்த ஆளுநரின் உத்தரவு செல்லும் என நீதிபதிகள் தெரிவித்ததாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.
இதனை பதிவு செய்த நீதிபதிகள், கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது மற்றும் தண்டனை குறைப்பு வழங்குவது போன்ற விஷயங்களில் அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட வேண்டுமா என்பது குறித்து முடிவெடுக்க 3 நீதிபதிகள் அமர்வு விசாரணைக்கு பரிந்துரை செய்தனர்.
இதுதொடர்பான அனைத்து வழக்குகளையும் தலைமை நீதிபதிக்கு அனுப்பிவைக்க உயர்நீதிமன்ற பதிவுத் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், எந்தெந்த சூழ்நிலைகளில் அமைச்சரவை பரிந்துரைக்கு மாறாக ஆளுநர் முடிவெடுக்க அதிகாரம் உள்ளது என்பதையும் தெரிவிக்க 3 நீதிபதிகள் அமர்வுக்கு அறிவுறுத்தினர்.