அஜித் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படத்தில் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குட் பேட் அக்லி” திரைப்படத்தில் இளமை இதோ இதோ, ஒத்த ரூபாயும் தாரேன் உள்ளிட்ட தனது பாடல்கள் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் இளையராஜா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பியும் படக்குழு சரிவர பதிலளிக்கவில்லை எனவும், நஷ்ட ஈடாக 5 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டுமெனவும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி செந்தில்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது “குட் பேட் அக்லி” திரைப்படத்தில், இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.
இளையராஜா பாடல்களை அனுமதியில்லாமல் பயன்படுத்தியது குறித்து படத் தயாரிப்பு நிறுவனம் 2 வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டுமெனவும் நீதிபதி ஆணையிட்டார்.