கோவை மதுக்கரை மரப்பாலம் விரிவாக்கப் பணிகள் கடந்த 5 மாதங்களாகக் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். அது குறித்த செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம்.
கோவை மதுக்கரை மரப்பாலம் சேலம், கொச்சி தேசிய நெடுஞ்சாலை அருகே அமைந்துள்ள முக்கிய பகுதியாகும். இந்தப் பகுதியில் ரயில்வே சுரங்கப்பாதை ஒன்றும் அமைந்துள்ளது.
இந்தப் பாலம் ஆங்கிலேயர்க் காலத்தில் மரத்தினால் கட்டப்பட்டதால் மரப்பாலம் என அழைக்கப்படுகிறது. பிறகு அந்தப் பாலம் கான்கிரீட் பாலமாக மாற்றப்பட்டது.
அந்த வழியில் தினமும் சுமார் 30 ஆயிரத்திற்கும் அதிகமான வாகனங்கள் கடந்து சென்று வந்தன. பாலத்தின் அகலம் குறைவாக இருப்பதால் ஒரு சமயத்தில் ஒரு வாகனம் மட்டுமே செல்ல முடியும். எதிர் திசையில் வரும் வாகனங்கள் அதுவரை காத்திருந்து தான் கடக்க முடியும்.
இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது. ஒவ்வொரு நாளும் வேலை, தொழில், கல்வி நிமித்தமாக ஆயிரக்கணக்கான மக்கள் பயணிக்கும் நிலையில், பாலத்தை அகலப்படுத்த தொடர்க் கோரிக்கைகள் எழுந்து வந்தன.
இதன் காரணமாகக் கடந்த மார்ச் மாதத்தில் பாலத்தை அகலப்படுத்த, மாநில நெடுஞ்சாலைத் துறை சார்பில், 102 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு டெண்டர் விடப்பட்டது. தொடர்ந்து பாலத்தின் இரு புறமும் குழிகள் தோண்டப்பட்டுப் பணிகள் தொடங்கப்பட்டன.
ஆனால் குடிநீர், மின் வாரியத்திடம் அனுமதி பெறாததால் பணிகள் மேற்கொள்ளப்படாமல் கடந்த 5 மாதங்களாகக் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் அந்தப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
மரப்பாலம் பகுதியை சுற்றி ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. பணிகளுக்காகப் பாலம் மூடப்பட்டதால் தினமும் 5 கிலோ மீட்டர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனைத் தெரிவிக்கின்றனர்.
கிடப்பில் போடப்பட்ட இந்தப் பால பணிகளால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக வேதனைத் தெரிவிக்கின்றனர் அந்தப் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்கள். மேலும் வருமானம் இன்றித் தவிப்பதாகவும் அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
பணிகள் துவங்கும் முன்பே குடிநீர் வாரியம், மின் வாரியத்துடன் பேசி முறையாக அனுமதி பெற்றிருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது என்று தெரிவிக்கும் மக்கள் உரிய தீர்வு காண வேண்டுமெனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.