சேலம் மாநகராட்சியில் அதிமுக எம்எல்ஏக்கள் தங்களின் தொகுதி நிதியில் கட்டி கொடுத்த 4 ரேஷன் கடைகளை மூடிவிட்டு, திமுகவினர் வாடகை இடத்தில் கடைகளை நடத்தி வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.
சேலம் மாநகராட்சியின் 55வது வார்டில் 4 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. முன்னர், அதிமுக எம்எல்ஏக்களாக இருந்த வெங்கடாசலம், எம்.கே.செல்வராஜ், தற்போதைய எம்எல்ஏ பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட 4 பேர் தங்களின் தொகுதி நிதியிலிருந்து புதியதாக ரேஷன் கடைகளை கட்டி கொடுத்தனர்.
ஆனால் திமுக ஆட்சிக்கு வந்தவுடன், இந்த ரேஷன் கடைகள் அனைத்தும் மூடப்பட்டு, வேறு பகுதியில் உள்ள வாடகை கட்டடத்திற்கு மாற்றப்பட்டன. குறிப்பாக 73வது எண் கொண்ட ரேஷன் கடைக்குச் சுமார் 12 லட்சம் ரூபாயில் புதிய கட்டிடம் கட்டப்பட்டது. இதே போல், மற்ற கட்டடங்களும் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டன.
ஆனால், அவை அனைத்தும் தற்போது மூடப்பட்டுள்ளதால், மக்கள் வரிப்பணம் வீணாகி வருகிறது. இதுபோதாதென்று, 4 ரேஷன் கடைகளும் செயல்படும் கட்டடங்களுக்கு வாடகை வேறு தர வேண்டியுள்ளது.
ஒவ்வொரு கடைக்கும் 5,000 முதல் 7,000 ரூபாய் வரை வாடகை செலுத்தப்படுவதாக கூறப்படுகிறது. இந்தப் பணமும் மக்கள் வரிப்பணத்தில் இருந்துதான் கொடுக்கப்படுகிறது என்பதை குறிப்பிட தேவையில்லை.
சேலம் மாநகராட்சியின் 55வது வார்டில் இயங்கவேண்டிய கடைகள், அருகில் உள்ள வார்டுகளில் உள்ள கட்டங்களில் செயல்பட்டு வருவதால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். ரேஷன் பொருட்களை வாங்க குறைந்தபட்சம் இரண்டு கிலோமீட்டர் தூரம் வரை நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளதாகவும் மக்கள் வேதனைத் தெரிவிக்கின்றனர்.
அதிமுக எம்எல்ஏக்கள் கட்டிக் கொடுத்த கட்டடங்கள் தற்போது திமுகவினரின் கார் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தும் பகுதியாக மாறியுள்ளதாகக் குற்றம்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக, 55வது வார்டில் உள்ள பல அரசு கட்டிடங்களில் நீண்ட நாட்களாகக் கார்கள் நிறுத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
எனவே, இது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, பழைய கட்டடங்களுக்கே ரேஷன் கடைகளை மாற்ற வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.