ஒரு காலத்தில் தமிழகத்தில் தேய்காய் விவசாயத்திற்குப் பெயர் போன ஊராக இருந்த ஈத்தாமொழி, தற்போது பழைய பெருமைகளை எல்லாம் படிப்படியாக இழந்து வருகிறது. காரணம் என்ன? இந்தச் செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் நெட்டை ரகத் தென்னை மரங்களுக்குப் புவிசார் குறியீடு பெற்ற பகுதியாக, கன்னியாகுமரி மாவட்டத்தின் ஈத்தாமொழி விளங்கி வருகிறது. அதேபோன்று இங்கு விளையும் தேங்காய் அளவில் பெரிதாகவும், அதிக எடைக் கொண்டதாகவும் உள்ளது.
20 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஈத்தாமொழி, ராஜாக்கமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில், ஒரு இளைஞருக்கு 500 தென்னை மரங்கள் இருந்தால், அவருக்குப் பெண் கொடுக்கப் பலரும் போட்டி போடும் நிலை இருந்தது. அந்த அளவுக்கு தென்னை மரங்கள், பொருளாதாரத்திற்கான முக்கிய ஆதாரமாக இருந்து வந்தன. ஆனால், இந்தச் சூழல் தற்போது மலையேறி விட்டது.
ஈத்தாமொழி தேங்காய்கள் தற்போது மதிப்பை இழந்து வருவதாகத் தென்னை விவசாயிகள் மற்றும் தேங்காய் வியாபாரிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். சமீப காலமாக வாடல் நோய், வண்டு தாக்குதல், வெள்ளைப்பூச்சு, இலை சுருட்டு போன்ற பாதிப்புகளால் தென்னை மரங்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டு வருவதாக அவர்கள் கூறுகின்றனர்.
தொடர் நோய் தாக்குதல்களால் தென்னை மரங்களில் விளைச்சல் குறைந்து வருவதாகவும், 100 தேங்காய் விளைய வேண்டிய இடத்தில் வெறும் 30 தேங்காய் மட்டுமே கிடைப்பதாகவுவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக, தென்னை மரங்களைச் சார்ந்து செய்யப்படும், தேங்காய் கொப்பரையில் இருந்து எண்ணெய் எடுத்தல், கயிறு தயாரித்தல் உள்ளிட்ட பணிகளும் நலிவடைந்து வருகின்றன.
ஒரு காலத்தில் ஈத்தாமொழி தேங்காய் வெளிமாநிலங்களுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. ஆனால், தற்போதோ, வெளி மாவட்டங்களில் இருந்து தேங்காய்களை இறக்குமதி செய்யும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
அரசு இதனை கருத்தில் கொண்டு தென்னை விவசாயத்தை ஊக்குவிக்க மானியமும், விவசாயிகளுக்குப் போதிய பயிற்சியும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மேலும், தென்னை மரங்களில் ஏற்படும் நோய் பாதிப்புகளுக்கு உரிய மருந்துகளை வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.