உலகின் முதல் ஆறாவது தலைமுறை ஸ்டெல்த் போர் விமானத்தை அமெரிக்கா தயாரிக்கத் தொடங்கியுள்ளது. F 47 என்று பெயரிடப் பட்டுள்ள அமெரிக்காவின் அதிநவீனப் போர் விமானம், சீனாவின் சீனாவின் J-35 மற்றும் ரஷ்யாவின் Su-57 போர் விமானத்தை விட வலிமையானது என்று கூறப்படுகிறது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
ஒரு நாட்டின் இராணுவ பலத்தின் முக்கிய அடையாளமாகப் போர் விமானங்களே உள்ளன. மேம்பட்ட அதிநவீனப் போர் விமானங்களைத் தயாரிப்பதில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற வல்லரசு நாடுகள் முன்னணியில் உள்ளன.
கடந்த மார்ச் 22 ஆம் தேதி, அமெரிக்க விமானப்படையின் அடுத்த தலைமுறை போர் விமானமான F-47 யை உருவாக்குவதற்கான ஒரு பெரிய ஒப்பந்தத்தை நிறுவனம் பெற்றுள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்தார்.
மேலும் இதற்கு முன்பு யாரும் பார்த்திராத ஒரு அதிநவீனப் போர் விமானமாக F-47 இருக்கும் என்றும், வேகம் முதல் சூழ்ச்சித்திறன் வரை ஒரு போர் விமானத்தின் அனைத்துப் பண்புகளையும் கொண்டிருக்கும் என்றும், உலகில் எந்த ஒரு போர் விமானமும் இதன் அருகில் கூட வராது என்று ட்ரம்ப் அறிவித்தார்.
இருபது ஆண்டுகளுக்கும் மேல் பயன்பாட்டில் இருக்கும் F-22 ஸ்டெல்த் போர் விமானத்தை மேம்பட்ட போர் விமானமாக மாற்றும் முக்கிய நடவடிக்கை இதுவென்று கூறப்படுகிறது. F-47 விமானத்தின் விலை மற்றும் மேம்பாட்டு ஒப்பந்தத்தின் மொத்த மதிப்பும் வெளியிடவில்லை என்றாலும் ஒரு F-47 போர் விமானத்தின் விலை 300 மில்லியன் டாலர் என்று கூறப்படுகிறது. அமெரிக்க வரலாற்றில் மிகவும் விலையுயர்ந்த போர் விமானமாக இதுவாகும்.
F-47 அமெரிக்காவின் புதியஆறாவது தலைமுறை ஸ்டெல்த் போர் விமானமாகும். இது அடுத்த தலைமுறை வான் ஆதிக்கம் (NGAD) திட்டத்தின் கீழ்த் தயாரிக்கப் படுகிறது. 2023 ஆம் ஆண்டில் (Northrop Grumman) நார்த்ரோப் க்ரம்மன் ஒப்பந்தக்காரராக போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்த பிறகு, F-47 போர் விமானத்தைத் தயாரிப்பதற்கான ஒப்பந்தம் போயிங் நிறுவனத்துக்குக் கிடைத்தது.
அமெரிக்க விமானப்படைக்காக, 185க்கும் மேற்பட்ட F-47 ரகப் போர் விமானங்களை தயாரிக்கும் பணியைப் போயிங் நிறுவனம் தீவிரப்படுத்தியுள்ளது. ரேடாரின் கண்ணுக்குப் புலனாகாத தன்மை, அதிவேகம், சென்சார்கள் மற்றும் மேம்பட்ட டிஜிட்டல் அமைப்புகள் மற்றும் தன்னாட்சி ட்ரோன்களுடன் இணைந்து பறக்கும் திறன் ஆகியவை இந்தப் போர்விமானத்தில் உள்ளன. அதிக ஆபத்துள்ள சூழல்களில் கூட லாவகமாகச் சென்று இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டதாகும்.
மேம்படுத்தப்பட்ட ஸ்டெல்த் தொழில்நுட்பமே F-47 போர் விமானத்தின் சிறப்பம்சமாகும். இதன் வேகம் ஒலியை விட இரு மடங்கு அதிகமாகும். அதாவது, மணிக்கு 2,470 கிலோமீட்டர் ஆகும். சுமார் 2000 கிலோமீட்டர் வரம்பு கொண்ட F-47 போர் விமானத்தில் AI-இயங்கும் அமைப்புகளும் உள்ளன. இதனால், போர்ச் சுழலில், ஒரே நேரத்தில் பல ட்ரோன்களைக் கட்டுப்படுத்த முடியும் என்று கூறப்படுகிறது.
ரஷ்யாவின் ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானம் Su-57 மற்றும் சீனாவின் J-35A ஆகிய ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களை விட 70 சதவீத மேம்பட்ட வரம்பை கொண்டதாக F-47 போர் விமானம் விளங்குகிறது.
இரண்டாம் உலகப் போரின் புகழ்பெற்ற அமெரிக்க போர் விமானமான P-47 தண்டர்போல்ட்டை நினைவு கூறும் வகையில் F-47 என்று பெயரிடப்பட்டாலும், இது, நாட்டின் 47வது அதிபர் காலத்தில் வந்தது என்பதையும் இந்தப்பெயர் சுட்டிக் காட்டுகிறது.
மிகவும் மேம்பட்ட ஆபத்தான மற்றும் தகவமைப்புத் திறன் கொண்ட போர் விமானமாக F-47 இருக்கும் என்று அமெரிக்க விமானப்படை தலைமைத் தளபதி ஜெனரல் டேவிட் ஆல்வின் தெரிவித்துள்ளார். மேலும், 2029ம் ஆண்டுக்குள் F-47 போர் விமானம் பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிவித்துள்ளார்.