இமயமலையை குடைந்து நாட்டின் மிக நீளமான சுரங்க ரயில் பாதை உத்தரகாண்ட் மாநிலத்தில் திறக்கப்பட உள்ளது. ஆச்சரியப்படும் அளவுக்கு இந்திய ரயில்வே துறைப் படைத்துள்ள சாதனை குறித்து விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில்.
உத்தரகாண்ட் மாநிலம் பொதுவாக மனதை குளிர்விக்கும் அழகிய சூழல்களை கொண்டிருந்தாலும், அங்கு வாழ்ந்து பார்ப்பவர்களுக்கே தெரியும், அவர்களது அன்றாட வாழ்க்கை கத்தி மீது நடப்பது போன்றதென்று.
வெண்போர்வை போர்த்தியது போல் பனி சூழ்ந்து மலைப்பிரதேங்கள் ரம்யமாகவே காட்சியளிக்கும்… ஆனால், திடீரென என்ன ஆனதென்றே தெரியாது. பனிபுயல் , பயங்கர நிலச்சரிவு, மேகவெடிப்பு என மக்களின் வாழ்க்கையையே புரட்டிப்போட்டு விடும்.
ஆனால், இதையெல்லாம் காரணம் காட்டி மக்களுக்கான அடிப்படை வசதிகளைச் செய்து கொடுக்காமல் இருக்க முடியுமா?…. முழுவதும் சுற்றுலாவை நம்பி இருக்கும் மாநிலமான உத்தரகாண்டில், போக்குவரத்து கட்டமைப்புகளை அமைக்காவிட்டால், மக்களின் வாழ்வாதாரம் எப்படி மேம்படும் என்பதை உணர்ந்துள்ள பாஜக அரசு, கங்கணம் கட்டி வேலைச் செய்து வருகிறது.
அந்த எண்ணம் தான் நாட்டின் மிக நீளமான சுரங்க ரயில் பாதையை உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைத்துள்ளது. ஆனால் இந்தச் சாதனையை எடுத்தோம் கவிழ்த்தோம் என்றெல்லாம் நிகழ்த்தப்படவில்லை. விவரம் அறிந்தால் எந்தவொரு நபரும் மலைத்துப் போய்விடுவர்…. இமய மலையைக் குடைந்து 14 புள்ளி 57 கிலோமீட்டர்த் தூரத்திற்கு ரயில்வே சுரங்க பாதை அமைக்கப்பட்டதே அதற்குக் காரணம்.
ரிஷிகேஷ் முதல் கர்னபிரயாக் வரை மொத்தம் 125 கிலோமீட்டர் தூரத்திற்கு ரயில்வழித்தடம் அமைக்கப்படும் நிலையில், தேவ பிரயாக் – ஜனாசுக்கு இடைப்பட்ட பகுதிகளை இணைப்பது பெரும் சவாலாக மாறியது. குறுக்கே இமயமலை அமைந்துவிட, அதனைக் குடைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இந்திய ரயில்வே துறை மற்றும் எல் அண்ட் டி நிறுவனம் இதன் சிரமத்தை உணர்ந்திருந்த போதும், மன உறுதியுடன் செயல்பட தொடங்கின. அதன்படி GERMAN MADE சுரங்கம் தோண்டும் இயந்திரத்தை களத்தில் இறக்கிச் சுரங்கம் தோண்டும் பணி விறுவிறுப்பாக நடைபெற்றது.
கடந்த ஏப்ரல் 16ம் தேதிக்குள் சுரங்கம் தோண்டும் பணி நிறைவடைய வேண்டும் எனத் திட்டமிடப்பட்ட நிலையில், 12 நாட்களுக்கு முன்னதாகவே பணிகள் நிறைவடைந்தன. இதற்காகச் சுரங்க தொழிலாளர்கள் அடைந்த சிரமம் கொஞ்ச நஞ்சமல்ல… திடீர் நிலச்சரிவு, இயந்திரம் பழுது எனப் பல சிரமங்களை எதிர்கொண்டனர்.
பொதுவாகச் சுரங்கம் தோண்டுவதன்றால் 50 ஆயிரம் மாதம் முதல் 60 ஆயிரம் கிலோ நியூட்டன் வேகத்தில் இயந்திரம் செலுத்தப்படும்.. ஆனால், இங்கு கதையே வேறு…. மூன்றரைக் கிலோமீட்டர் தூரத்தை அடைந்ததும் பாறைகள் கடினமாகிவிட, ஒரு லட்சத்து முப்பாதியிரம் கிலோ வேகத்தில் இயந்திரத்தைச் செலுத்த வேண்டியிருந்ததாகத் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சக்தி எனப் பெயரிடப்பட்ட ஜெர்மன் இயந்திரத்தைக் கொண்டு சுரங்கம் தோண்டியதாகத் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்துள்ள தொழிலாளர்கள், 140 மீட்டர் நீளம் கொண்ட இயந்திரத்தை நிறுத்திவிட்டால் அது பேரிடராக மாறும் சூழல் கூட இருந்ததாகத் திகைப்புடன் தெரிவிக்கின்றனர்.
எது எப்படியோ, 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் உழைப்பில் உருவாகி உள்ள நாட்டின் மிக நீளமான சுரங்க ரயில் பாதை, பயணிகளுக்குத் திகிலூட்டும் அனுபவங்களைத் தரும் என்பதில் சந்தேகமில்லை.