இந்தியாவின் தொழில்துறை ஜாம்பவனான ரத்தன் டாடா, கார் உற்பத்தியில் கால் பதித்த போது பெருத்த அவமானங்களையே சந்தித்தார். உதாசீனத்தை உரமாக்கி, விமர்சனங்களை தவிடுபொடியாக்கி தன்னை அவமானப்படுத்திய வெளிநாட்டுக் கம்பெனிகளுக்கு கெத்தாக டாட்டா காட்டிய ரத்தன் டாடாவின், நம்பிக்கைச் சிகரங்கள் பகுதியில் பார்க்கலாம்.
ஒவ்வொருவரின் வெற்றிக்குப் பின்னாலும் மிகப்பெரும் தோல்வியிருக்கும். இந்தியாவின் தொழில் ஜாம்பவான் ரத்தன் டாடாவும் இதற்கு விதிவிலக்கல்ல.
1998ம் ஆண்டில் தான் அப்படியான சம்பவம் நடைபெற்றது. முதல்முறையாக உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட பயணிகள் காரான டாடா இண்டிகா, சந்தையில் களமிறக்கப்பட்ட நேரம் அது. ஜெர்மன், பிரிட்டன், அமெரிக்கா, ஜப்பான் நாடுகளின் பிரம்மாண்ட நிறுவனங்கள் எல்லாம், கார் விற்பனைச் சந்தையை ஒட்டுமொத்தமாகக் கைக்குள் வைத்திருக்க, சிறிய ரகக் காருடன் டாடா குழுமமும் சீறிப்பாயக் களமிறங்கியது.
ஆனால், ஆரம்பக்கட்ட விற்பனை மந்தமாகி விட, டாடா குழுமத்தின் திட்டம் மிகப்பெரிய தோல்வி கண்டது. எப்படியாவது இண்டிகா கார் விற்பனையைச் சூடு பிடிக்க வைக்க வேண்டும் என்ற ஆசையுடன் ரத்தன் டாடன், அமெரிக்காவின் மிகப்பெரும் கார் உற்பத்தி நிறுவனமான FORD கம்பெனியை அணுகினார். ஆனால், அவருக்கு ஏமாற்றமும் அவமானமுமே மிஞ்சியது.
அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் உள்ள டெட்ராய்ட் நகருக்குத் தனது குழுவினருடன் பயணம் மேற்கொண்ட அவர், ஃபோர்டு நிறுவனத்துடன் கூட்டு வைத்து டாடா இண்டிகா கார் விற்பனையை வெற்றியடைய செய்து விட வேண்டும் என நினைத்திருந்தார்.
ஆனால் ஃபோர்டு நிறுவன அதிகாரிகள் ரத்தன் டாடாவை அவமானப்படுத்தினர். உதாசீனப்படுத்தினர். கார் விற்பனை எல்லாம் உங்களுக்கு எதற்கு எனக் கிண்டலடித்த அவர்கள், உங்களுக்கெல்லாம் இந்தத் தொழிலில் நுழைவதற்கு உரிமையே இல்லை எனவும் எல்லை மீறி பேசினர்.
ரத்தன் டாடாவுக்கு ஒன்று மட்டும் புரிந்தது. இந்தியாவில் இருந்து ஒருவர் வளர்ந்து வருவது, கார் விற்பனையில் கோலோச்சும் நிறுவனங்களுக்குப் பிடிக்கவில்லை என்பதை அறிந்து கொண்டார். ரத்தன் டாடா ஏமாற்றத்துடன் நாடு திரும்ப, அவர் மனதில் ஒன்றே ஒன்று மட்டும் ஓடிக்கொண்டு இருந்தது. கத்துக்குட்டியாக நினைத்துத் தானே அவமதித்தீர்கள்… கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் இறக்கும் காலம் வரும் என்பதே அது.
தாயகம் திரும்பிய அவர், இண்டிகா கார் விற்பனையில் எந்த இடத்தில் தோல்வியடைந்தோம்?வாடிக்கையாளர்கள் எதிர்பார்ப்பது என்ன? எனத் தீவிரமாக ஆராயத் தொடங்கினார். குறைகள் ஒவ்வொன்றாகக் களையப்பட, இண்டிகா கார் வாடிக்கையாளர்களின் கவனம் பெற்றது.
ஒரு கட்டத்தில் விற்பனைக் களைகட்ட, போட்டி நிறுவனங்கள் வாயடைத்து நின்றன. ஆனால், ரத்தன் டாடா நிகழ்த்தி சாதனை இது மட்டும் அல்ல. காலச்சக்கரம் சுழல சுழல இந்திய கார் விற்பனைச் சந்தை மொத்தமும் ரத்தன் டாடாவின் விரல் நுனியில் வந்தது. எந்த நிறுவனம் ரத்தன் டாடாவை அவமானப்படுத்தியதோ, அதுவே அவரது ஆதரவைத் தேடும் சூழல் பிறந்தது.
ஒருகாலத்தில் கொடி கட்டி பிறந்த போர்டு நிறுவனம், வங்கிக் கடன் செலுத்த முடியாமல் சிக்கிக்கொண்டது. அதற்காக, தங்களது LUXARY BRAND-களான Jaguar and Land Rover-ஐ ஏலத்திற்கு விட்டது. ஆனால் அந்நிறுவனம் சிறிதும் எதிர்பார்க்கவில்லை… அவர்களால் உதாசீனப்படுத்தப்பட்ட நபரே, அவர்களுக்கு உதவுவார் என்று.
Jaguar and Land Rover Brand-களை 2 புள்ளி 3 பில்லியன் அமெரிக்க டாலர்க் கொடுத்து விலைக்கு வாங்கியதும், ஹென்ரி ஃபோர்டின் பேரன் பில் ஃபோர்டு கூறியது ஒன்றுதான்….”எங்களைக் காப்பாற்றியதற்கு நன்றி ரத்தன் டாடா”.