2023ஆம் ஆண்டு சாலை விபத்துக்களால் 77 ஆயிரத்து 539 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய அரசு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2023ஆம் ஆண்டில் சாலை விபத்துகளில் 77 ஆயிரத்து 539 பேர் உயிரிழந்துள்ளதாகவும்,
சாலை விபத்துகளில், இருசக்கர வாகனங்களால் ஏற்படும் விபத்துகள் அதிகமாக உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2023ஆம் ஆண்டில் இருசக்கர வாகன விபத்துக்களால் 45 சதவீதம் பேர் மரணமடைந்துள்ளதாகவும், இதில், பாதசாரிகள் மற்றும் சைக்கிளில் செல்பவர்களில் நான்கில் ஒரு பங்கு இருசக்கர வாகனங்கள் மோதி இறப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இருசக்கர வாகன ஓட்டுநர்களால் ஏற்படும் விபத்துக்களில் அதிகபட்சமாக தமிழகத்தில் ஆயிரத்து 796 பாதசாரிகளும், 5 ஆயிரத்து 96 இருசக்கர வாகன ஓட்டிகளும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2023ல் கார்கள் மற்றும் டாக்சிகளால் ஏற்படும் சாலை விபத்துகள் 2வது இடத்திலும், லாரிகளால் ஏற்படும் விபத்துகள் 3ஆம் இடத்தில் உள்ளது என மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.