கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில், பள்ளிவாசலுக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யக்கோரி, இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிதம்பரம் லால்கான் தெருவில் அமைந்துள்ள பள்ளிவாசலில் அதிக வருமானம் வருவதை தெரிந்து கொண்ட சில இஸ்லாமியர்கள், வஃக்பு வாரியம் தங்களை நியமித்துள்ளதாகவும், எனவே தங்களிடம் மசூதியை ஒப்படைக்க வேண்டுமெனவும் பிரச்சனையில் ஈடுபட்டு வந்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் அதனைச் சார்ந்த இஸ்லாமிய மக்களுக்கு, சாகுல் ஹமீது என்பவர் உதவி செய்து வந்ததால், கடந்த 6ஆம் தேதி, பள்ளிவாசலில் வைத்து, போலீசார் கண்முன்னே அவரை கொலை வெறியுடன் ஒரு தரப்பினர் தாக்கினர்.
பள்ளிவாசலுக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதலில் ஈடுபட்ட நபர்களை கைது செய்யக்கோரி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினரும், சில இஸ்லாமிய அமைப்பினரும், தெற்கு ரத வீதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவல்துறையின் அனுமதியை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், போலீசாரைக் கண்டித்து முழக்கம் எழுப்பினர்.