நேபாளம் முதல் பாகிஸ்தான் வரை அரசுக்கு எதிரான போராட்டங்கள் அதிகரித்து வருகின்றன. சில போராட்டங்கள் ஆட்சியாளர்களின் அஸ்திவாரத்தையே ஆட்டிபடைத்திருக்கின்றன. நேபாளம் தற்போது போர்க்களமாகியுள்ள நிலையில், இந்தியாவை சுற்றி நமது அண்டை நாடுகளில் நடந்த போராட்டங்களின் வீரியத்தைத் தற்போது பார்க்கலாம்.
இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் வெடித்துள்ள போராட்டங்கள், நாட்டையே கலவரபூமியாக மாற்றியுள்ளது. வேலைவாய்ப்பின்மை, ஊழல் உள்ளிட்டவற்றால் அரசு மீது அதிருப்தியில் இருந்த பொதுமக்கள், சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்ட தடையால் அரசுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்தனர்.
அரசு சொத்துகளை சூறையாடிய போராட்டக்காரர்கள், நாடாளுமன்றத்திற்குத் தீ வைத்து அங்குள்ள பொருட்களை தீயிட்டு கொளுத்தி ஆத்திரத்தை தீர்த்தனர். நாடு முழுவதும் அரசுக்கு எதிரான போராட்டம் காட்டுத்தீ போல் பரவிய நிலையில், சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது.
அப்படியிருந்தும் நிலைமையைக் கட்டுப்படுத்த முடியாததால், நேபாளப் பிரதமர் சர்மா ஒலி பதவியை ராஜிமானா செய்துவிட்டுத் தலைமறைவானார். அவரது வீட்டை சூழ்ந்த போராட்டக்கார்கள், ஜன்னல் வழியாக வீட்டிற்குள் நுழைந்து தீ வைத்தனர். நேபாள அதிபர் ராம் சந்திரப் பவுடல், உள்துறை அமைச்சர் ரமேஷ் லேலாக் மற்றும் அமைச்சர்கள், அரசியல்வாதிகளின் வீடுகள் அலுவலகங்களும் தீக்கிரையாக்கப்பட்டன.
காத்மாண்டுவில் நேபாள நிதி அமைச்சர் பிஷ்ணு பவுடல் மீது போராட்டக்காரர்கள் கொடூரத் தாக்குதல் நடத்தினர். சாலையில் விரட்டி விரட்டி தாக்குதல் நடத்தும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
உள்துறை அமைச்சர் ரமேஷ் லேலாக், வேளாண் அமைச்சர் ராம்நாத் அதிகாரி, சுகாதாரத்துறை அமைச்சர் பிரதீப் பால்டெல் ஆகியோர் பதவியை துறந்தனர். ஆனாலும் போராட்டம் ஓய்ந்தபாடில்லை. இந்தியாவின் அண்மை நாடுகளில், அரசுக்கே சவால் விடும் போராட்டங்களும், மக்கள் எழுச்சியும் அரசியல் அமைதியின்மையை ஏற்படுத்தியுள்ளன.
வங்கதேசத்தில் 2024ம் ஆண்டு ஆகஸ்டில் வெடித்த வெகுஜன மக்களின் போராட்டம் ஆட்சியையே கவிழ்த்தது…ஊழல், சர்வாதிகார ஆட்சி என்ற குற்றச்சாட்டுகளால் மக்கள் போராட்டம் தூண்டப்படவே, பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. அதன் பிறகு அங்கு நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்தது..
மியான்மரில் உள்நாட்டு மோதல்களால், 2021ம் ஆண்டு ராணுவ ஆட்சி கவிழ்க்கப்பட்டது. 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அகதிகள் இந்தியாவில் அடைக்கலம் புகுந்ததால், பிராந்தியத்தில் பதற்றமான சூழல் நிலவியது…
9/11 தாக்குதலுக்குப் பின்னர் தாலிபான்களை அதிகாரத்தில் இருந்து அகற்றவும், அல் கொய்தா அமைப்பை வேரறுக்கவும், அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் முகாமிட்டதால் ஆப்கானிஸ்தானில் போர் வெடித்தது.
கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் நீடித்த போர், அந்நாட்டையே சீர்குலைத்தது. நேட்டோ படைகள் வெளியேற்றத்திற்குப் பின்னர் ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் அரசு அமைந்தது. எனினும், தாலிபான், ஐஎஸ்ஐஎஸ்-கே மற்றும் தாலிபான் எதிர்ப்பு குடியரசுக் கட்சி கிளர்ச்சியாளர்களுக்கு இடையே மோதல்கள் நீடித்து வருகின்றன.
2022ம் ஆண்டு பொருளாதார நெருக்கடியின் பிடியில் இலங்கை சிக்கியது. இதன் காரணமாக அங்கு மக்கள் கிளர்ச்சி வெடிக்கவே, அதிபர கோத்தபய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோர் நாட்டை விட்டே ஓடினர். அரசு சொத்துகள், அதிபர், பிரதமரின் வீடுகள் சூறையாடப்பட்டதை யாரும் மறந்திருக்க முடியாது.
பாகிஸ்தானில் அரசியல் ஸ்திரமற்ற நிலை நீடித்து வரும் நிலையில், நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு மூலம் பிரதமர் இம்ரான்கான் பதவி நீக்கம் செய்யப்பட்டார். 2022ம் ஆண்டு அவரது கட்சி நடத்திய பேரணியின்போது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட நிலையில் நூலிழையில் உயிர் தப்பினார் இம்ரான்கான்.
அங்கு தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (TTP) போன்ற குழுக்கள் வடமேற்கு பாகிஸ்தான் மற்றும் பலுசிஸ்தானில் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளன. பலூச் விடுதலை ராணுவம் போன்ற பிரிவினைவாத குழுக்களும் பாகிஸ்தானுக்கு அச்சுறுத்தல்களை ஏற்படுத்தி வருகின்றன.
இவ்வாறாக இந்தியாவை சுற்றியுள்ள நாடுகள் அரசியல் நிலைத்தன்மையை இழந்திருப்பதால், அங்கு நிலைமை மோசமாகி வருகிறது.