ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, இந்திய ராணுவம் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பாதுகாப்பான தகவல் தொடர்பு சாதனத்தை பயன்படுத்தியிருப்பது தற்போது தெரியவந்துள்ளது. அது என்ன என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி, லஷ்கர்-இ-தொய்பாவின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் பிரன்ட் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 26 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இதற்குப் பதிலடியாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தீவிரவாத முகாம்களை குறிவைத்து இந்திய ராணுவம் மேற்கொண்ட ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை மிகப்பெரிய வெற்றியை ஈட்டியது.
ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது தகவல் பரிமாற்றத்திற்காக, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு மேம்படுத்தப்பட்ட Secure Army Mobile Bharat Version சுருக்கமாக SAMBHAV போனை பயன்படுத்தியதாக ராணுவ தலைமைத் தளபதி உபேந்திரத் திவேதி மனம் திறந்துள்ளார்.
AIMA-வின் 52வது தேசிய மேலாண்மை மாநாட்டில் பங்கேற்றுப் பேசிய அவர், ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது தகவல் தொடர்புக்காக ராணுவம் வாட்ஸ் அப்-பையோ அல்லது பிற தகவல் தொடர்பு செயலிகளையே இந்திய ராணுவம் ஒருபோதும் பயன்படுத்தவில்லை என்பதையும் உறுதி செய்தார்.
ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை என்பது ராணுவ வீரர்கள், தளபதிகள் தொடங்கி, விஞ்ஞானிகள், கொள்கை வகுப்பாளர்கள் வரையில் ஒரு கலவையான, நாட்டின் முழுமையான அணுகுமுறை என்பதையும் சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக ராணுவ தலைமை தளபதி உபேந்திரத் திவேதி குறிப்பிட்ட SAMBHAV என்பது 2024ம் ஆண்டு ஆத்மநிர்பர் பாரத் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட “end-to-end secure mobile ecosystem” அதாவது முற்றிலும் பாதுகாப்பான மொபைல் வலை அமைப்பாகும்.
மொபைல் நெட்வொர்க்குகளில் ஒட்டுக்கேட்கும் வாய்ப்பு அதிகம் என்பதால், ராணுவத்திற்குப் பாதுகாப்பான தகவல் தொடர்பு அவசியமாகிறது. SAMBHAV போனில், மேம்பட்ட encryption தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டிருப்பதால், தகவல்கள் பாதுகாப்பாகவும், பிறரால் ஊடுருவ முடியாதவாறும் இருப்பதை உறுதி செய்கிறது. சமகாலத்திற்கேற்ப 5ஜி தொழில்நுட்பத்தில் இயங்கக்கூடிய SAMBHAV போன் மூலம் தகவல்களை எவ்விதத் தடையும் இன்றிப் பெற முடியும், பயணத்தின்போதும் இடையூறின்றித் தகவல்களை வழங்க முடியும்.
அதுமட்டுமின்றி நெட்வொர் சாராமல் இயங்கக் கூடிய வகையிலும் வடிவமைக்கப்பட்டு உள்ளது. மேலும் வாட்ஸ் அப் போன்று உள்நாட்டில் உருவாக்கப்பட்ட M-Sigma அப்ளிகேஷன் இதில் உள்ளதால், ஆவணங்கள், படங்கள், வீடியோக்களை எவ்விதக் கசிவும் இன்றி வழங்க முடியும் என்கிறார்கள் ராணுவ அதிகாரிகள்.
அண்மையில் சீனாவுடன் நடந்த பல கட்ட பேச்சுவார்த்தையின்போது SAMBHAV மொபைல் போன்கள் தான் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டன. 30 ஆயிரம் போன்கள் ராணுவ அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.