சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பயணிகளின் செல்போன் மற்றும் பணத்தை திருடிவந்த நவோனியா கும்பலைச் சேர்ந்த கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மிக நுணுக்கமான திட்டங்களுடன் செயல்பட்டுக் கைவரிசையை காட்டும் நவோனியா கும்பலிடம் இருந்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனக் காவல்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னைச் சென்ட்ரல் மற்றும் புறநகர் மின்சார ரயில் நிலையங்களில் பயணிகள் தங்களின் பயணச்சீட்டைப் பெறுவதற்காக வரிசையில் காத்திருக்கும் போது, அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று அவர்கள் மீது துணியை போடுவது போல போட்டு அவர்களின் மொபைல்போன் மற்றும் பணத்தை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் அண்மையில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின.
இந்தக் கொள்ளைக் கும்பலின் கைவரிசை அடுத்தடுத்து அரங்கேறிய நிலையில் ரயில்வே போலீசார் தனிப்படை அமைத்துத் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர். அதே திருட்டுக் கும்பல் ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் சென்னை மெரினா கடற்கரையில் அதிகளவு மக்கள் கூடுவதைச் சாதகமாக பயன்படுத்தி தங்களின் திருட்டு கைவரிசையைக் காட்டுவதையும் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.
அப்படியாகக் கடந்த ஞாயிற்றுக் கிழமைச் சென்னை மெரினா கடற்கரையில் பொதுமக்களிடம் திருட்டு வேலையைக் காண்பிக்க முயன்ற கும்பலைக் காவல்துறையினர் கையும் களவுமாகப் பிடித்தனர்.
காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர்கள் நவோனியா கும்பலைச் சேர்ந்தவர்கள் என்பதும், பெரும்பாலும் ஜார்க்கண்ட் மற்றும் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.
பல்வேறு மாநிலங்களில் உள்ள ரயில்நிலையங்கள் உட்பட பொதுமக்கள் அதிகளவு கூடும் இடங்களுக்குள் புகுந்து அசால்டாக மொபைல் போன் மற்றும் பணத்தை திருடிய இக்கும்பல் தற்போது தமிழகத்தில் நுழைந்துள்ளது.
திருட்டில் ஈடுபடும் போது அவர்களின் செயல்களை மறைக்கத் துண்டு, கைக்குட்டை அல்லது செய்தித் தாள்களைப் பயன்படுத்தி கையை மறைத்துத் திருட்டு சம்பவத்தில் ஈடுபடுவதையே அவர்கள் வழக்கமாக வைத்திருக்கிறார்கள் என்பது விசாரணையில் உறுதியாகியுள்ளது. பட்ட பகலிலும் கூட அருகில் இருப்பவர்களுக்குக் கூட சந்தேகம் வராமல் மொபைல்போன்களைத் திருடுவதில் கில்லாடிகள் என்பதும் அவர்களின் கடந்த கால திருட்டுச் சம்பவங்கள் தெளிவுபடுத்தியுள்ளன.
பொதுவாக ஒவ்வொரு திருட்டுச் சம்பவத்தின் போது 2 முதல் மூன்று பேர் சேர்ந்து ஈடுபடுவார்கள் எனவும், கூட்டமான இடங்களில் பொதுமக்களின் கவனத்தை ஒருவர் திசை திருப்பும் நேரம் பார்த்து மீதமிருக்கும் இருவர் திட்டமிட்ட படி தங்களின் திருட்டுத் தொழிலில் ஈடுபடுவார்கள் எனவும் கூறப்படுகிறது.
தேவை ஏற்படும் பட்சத்தில் சிறுவர்களையும் பன்படுத்தி, குறிப்பிட்ட நபர்களை இடிப்பது போல இடிப்பதும், அவர்களிடம் சண்டைப் போடுவது போலவும் சில திருட்டுச் சம்பவங்கள் நடைபெற்றிருப்பதும் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
திருட்டில் ஈடுபடுவோர்ப் பெரும்பாலும் இளைஞர்கள் என்பதால் செல்போன் திருடுவதைப் பார்த்துவிட்டாலும் பிடிக்க முடியாத அளவிற்கு வேகமாகத் தப்பி ஓடிவிடுவதையும் நவோனியா கும்பல் வாடிக்கையாக வைத்துள்ளனர். ஒரு நகரத்தில் ஒரு வாரம் தங்கியிருந்து தங்களால் இயன்ற அளவு திருடிவிட்டு அடுத்த வாரம் வேறு ஒரு நகரத்திற்கு நவோனியா கும்பல் இடம்பெயருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
காவல்துறையினரிடம் சிக்காமல் இருக்கவே இந்தப் புதிய யுத்தியை நவோனியா கும்பல் கையாண்டு வருவதாகவும், இதுவரைப் பல்வேறு நகரங்களில் கைவரிசையைக் காட்டிவிட்டு சென்னைக்கு வந்த கும்பல் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு கும்பல் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில் மீதமிருக்கும் கும்பலைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன.
தமிழகத்தில் மொபைல் போன் திருட்டுகள் அதிகரித்து வரும் நிலையில், ரயில்வே பாதுகாப்பு படை, தமிழ்நாடு ரயில்வே போலீஸ் மற்றும் உள்ளூர் காவல்துறையினர் இணைந்து நவோனியா கும்பல் குறித்தும் பல்வேறு எச்சரிக்கைகளை பொதுமக்களுக்கு வழங்கியுள்ளனர்.
மிக நுணுக்கமாகத் திட்டமிட்டு கொள்ளையில் ஈடுபடும் கும்பலை கண்டறிவதும், கண்காணிப்பதும் மிகவும் கடினமானது என்பதால் பொதுமக்கள் கூடுதல் கவனத்துடன் இருக்குமாறும் காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.