நேபாள அரசுக்கு எதிராக இளைஞர்கள் நடத்திய போராட்டம் கலவரமாக மாறிய நிலையில், பிரதமரின் இல்லத்தை போராட்டக்காரார்கள் சூறையாடினர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னதாகப் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட 26 சமூக வலைதளங்களுக்கு நேபாள அரசு தடை விதித்தது.
இதனையடுத்துத் திங்கள்கிழமை காலையில் அந்நாட்டின் தலைநகர் காத்மாண்டுவில் குவிந்த இளைஞர்கள், சமூக வலைதளத் தடை மற்றும் அரசின் ஊழல் ஆகியவற்றுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தை ஒடுக்கப் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 19 இளைஞர்கள் கொல்லப்பட்டனர்.
இதனையடுத்துப் போராட்டம் கலவரமாக வெடித்த நிலையில், சமூக வலைதளங்களுக்கு விதித்த தடையை நேபாள அரசு திரும்ப பெற்றது. ஆனால், அரசின் ஊழலுக்கு எதிராக 2-வது நாளாகவும் போராட்டம் தொடர்ந்தது.
அப்போது நிலைமைக் கட்டுப்பாட்டை மீறிய நிலையில், பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாகச் சர்மா ஒலி அறிவித்தார். இருப்பினும் பிரதமரின் இல்லத்தை சூறையாடிய போராட்டக்காரார்கள் அவற்றுக்குத் தீ வைத்தனர்.
நேபாளத்தில் நிலைமைக் கட்டுப்பாட்டை மீறிய நிலையில், பிரதமர், அமைச்சர்களின் வீட்டைத் தொடர்ந்து நாடாளுமன்ற வளாகத்துக்கும் போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். இதனால் நாடாளுமன்ற வளாகம் அமைந்திருந்த பகுதி முழுவதும் கரும்புகைச் சூழ்ந்து அசாதாரண சூழல் நிலவியது.