பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்த காத்திருப்பதாக ட்ரம்ப் தெரிவித்திருந்த நிலையில், தானும் ஆவலுடன் காத்திருப்பதாக, பிரதமர் மோடி கூறியுள்ளார்.
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் விவகாரத்தில் இந்தியா மீது அமெரிக்கா 50 சதவீதம் வரியை விதித்ததால் இரு நாடுகளுக்கு இடையிலான உறவு முற்றிலும் சீர்குலைந்தது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் பிரதமர் மோடி, சீனா மற்றும் ரஷ்யா அதிபர்களுடன் நெருக்கம் காட்டிய நிலையில், இந்தியாவை சீனாவிடம் இழந்து விட்டோம் என அதிபர் டிரம்ப் வெளிப்படையாகப் புலம்பினார்.
இத்தகைச் சூழலில், இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருவதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், வரும் வாரங்களில் தனது நல்ல நண்பரான மோடியுடன் பேச மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறேன் எனக் கூறியுள்ளார். மேலும், வெற்றிகரமான பேச்சுவார்த்தை நல்ல முடிவை எட்டும் என்பதில் உறுதியாக இருப்பதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
இதற்குப் பதிலளித்த பிரதமர் மோடி, இந்தியாவும் அமெரிக்காவும் நெருங்கிய நண்பர்கள், இயற்கையான கூட்டாளிகள் எனக் குறிப்பிட்டுள்ளார். இந்தியா, அமெரிக்கா இடையிலான வர்த்த பேச்சுவார்த்தை, இருநாடுகளின் கூட்டாண்மையில் வரம்பற்ற திறனை உருவாக்க வழிவகுக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
அதிபர் டிரம்புடன் பேசத் தாமும் ஆவலுடன் காத்திருப்பதாகவும், இருநாட்டு மக்களுக்கும் வளமான எதிர்காலத்தை உருவாக்கித்தர இணைந்து பணியாற்றுவோம் எனவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.