மின்சார வாகன உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும் அரிய மண் தாது ஏற்றுமதியை சீனா கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் நிலையில், இந்தியா மாற்று மின்சார மோட்டார் வாகனச் சோதனையை மீண்டும் தொடங்கியுள்ளது. இது உள்நாட்டுத் தயாரிப்பை ஊக்கப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ராணுவம், மின்சார வாகனம், எரிசக்தி மற்றும் மின்னணுவியல் துறைகளில் பயன்படுத்தப்படும் 17 தனிமங்களின் தொகுப்பான அரிய மண் தாதுக்களுக்கு அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் சீனாவையே நம்பியுள்ளன.
உலகளவில் தேவைப்படும் அரிய மண் தாதுக்களை சீனாதான் 90 சதவிகிதம் உற்பத்தி செய்து வருகிறது. விண்கலம், ஏவுகணைகள், மின்சாரக் கார்கள், டிரோன்கள், ரோபோக்கள் மற்றும் பெட்ரோல் கார்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் பல வகையான மின்சார மோட்டார்களுக்கு இந்த வகையான உலோகங்கள் காந்தங்களாகப் பயன்படுத்தப்படும் என்பதால் மிகவும் அவசியமானதாகப் பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவுடனான வர்த்தகப் போருக்குப் பின்னர் இந்த அரிய மண் தாதுக்கள் ஏற்றுமதியை கட்டுப்படுத்தியது சீனா. இது அமெரிக்காவை மட்டுமல்ல, பிற நாடுகளிலும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது… முக்கியமான கனிமங்களை வெட்டியெடுப்பதிலும் பதப்படுத்துவதிலும் சீனா ஆதிக்கம் செலுத்தி வருவதே இதற்குக் காரணம்.
இந்த நிலையில் MADE IN INDIA, சுயசார்பில் கவனம் செலுத்தி வரும் இந்தியா, சொந்தமாகக் காந்தங்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் 3500 சதுர அடியில் அமைந்துள்ள ஆய்வகத்தில், அரிய மண் தாதுக்களுக்காகச் சீனாவை சார்ந்திருக்கும் நிலையை குறைக்க, புதிய EV மோட்டாரை உருவாக்கி நமது பொறியாளர்கள் பரிசோதனை முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
வழக்கமான EV மோட்டார்களை போன்று அல்லாமல், Sterling Gtake E-Mobility-யால் சோதிக்கப்படும் ஒன்றில், அரிய பூமி காந்தங்களை பயன்படுத்துவதில்லை. இந்தத் தொழில்நுட்பம் புதிதல்ல என்றாலும், அசாதாரணமானது என்றும், சர்வதேச அளவில் 3வது கார்ச் சந்தையான இந்தியாவில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏழு இந்திய வாகன உற்பத்தியாளர்கள், புதிய மோட்டார்களை பரிசீலனை செய்து வருவதாகவும், அனுமதி கிடைக்கும் பட்சத்தில் ஓர் ஆண்டுக்குள் உற்பத்தியைத் தொடங்கிவிடலாம் என்றும் Sterling நிர்வாக இயக்குநர் ஜெய்தீப் வாத்வா நம்பிக்கையூட்டுகிறார்.
அரசு அனுமதிக்கும் பட்சத்தில், 2029ம் ஆண்டு இலக்கிற்கு முன்னதாகவே EV மோட்டார்கள் சந்தைக்கு வந்துவிடும் என்றும் கூறுகிறார். ஃபரிதாபாத்தில், ஸ்டெர்லிங் தனது ஆய்வகத்தில், இருசக்கர வாகனத்தின் பின்புற சக்கரத்தில் ஒரு மோட்டாரை பொருத்தி, அதன் செயல்பாட்டை ஆராய்ந்து வருகிறது.
இவ்வகை மோட்டார்கள், magnetic force மற்றும் power-ஐ உருவாக்க, அரிய மண் காந்தங்களுக்குப் பதிலாக இறுக்கமாகச் சுற்றப்பட்ட உலோகச் சுருள்களைப் பயன்படுத்துகின்றன. இந்தத் தொழில்நுட்பம் பிரிட்டனின் அட்வான்ஸ்டு எலக்ட்ரிக் மெஷின்ஸுக்குச் சொந்தமானது. ஜூன் மாதம் ஸ்டெர்லிங்குடன் உரிம ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம் இந்திய நிறுவனம் உள்நாட்டில் மோட்டார்களை உருவாக்க முடிந்தது.
இந்தியாவின் ஆட்டோமொபைல் துறையில் அரிய மண் தாதுக்களை அதிகம் இறக்குமதி செய்யும் நிறுவனமான சோனா, உள்நாட்டிலேயே காந்தங்களைத் தயாரிக்க திட்டமிட்டுள்ளது, மேலும் சீனாவிலிருந்து வரும் கனமான அரிய மண் தாதுக்கள் இல்லாத மோட்டார்களையும் உருவாக்கி வருகிறது.
பிரதமர் மோடி – சீன அதிபர் ஜி ஜின்பிங் பேச்சுவார்த்தையின்போது, இருநாடுகள் இடையேயான வர்த்தகத்தை மேம்படுத்துவது குறித்து விரிவாக விவாதித்திருந்தனர். அப்போது காந்த ஏற்றுமதி மீதான தடைகளை நீக்கச் சீனா ஒப்புக்கொண்டது. எனினும் அதற்கான காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை.
ஸ்டெர்லிங் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் காந்தங்களைப் புறந்தள்ளி, ferrite தாதுக்களைப் பயன்படுத்தும் மாற்று தொழில்நுட்பங்களை நோக்கி நகரும் பணியை மேற்கொண்டு வருகின்றன. உலகளவில் ஐந்தாவது பெரிய அரிய மண் தாதுக்களைக் கொண்டுள்ளபோதிலும், அவற்றைக் காந்தங்களாக செயலாக்கும் திறன் இந்தியாவில் இல்லை என்று கூறப்படுகிறது.
அரிய மண் தாதுக்களை வெட்டி எடுத்துப் பதப்படுத்தும் திட்டங்கள் உருவாகப் பல ஆண்டுகள் ஆகும் என்றாலும், இந்தியா அதில் வேலைச் செய்வதை நிறுத்தக்கூடாது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
இவற்றை நிவர்த்தி செய்ய மத்திய அரசு, mining and processing-கிற்குச் சலுகைகளை வழங்க திட்டமிட்டுள்ளது. அதே நேரத்தில் ஜப்பானிய மற்றும் தென் கொரிய நிறுவனங்களுடன் இணைந்து காந்தங்களை உற்பத்தி செய்யவும் முடிவு செய்துள்ளது.
 
			 
                    















