அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வரி விதிப்புகளுக்கு மத்தியில், கடல் உணவு வர்த்தகத்தை அதிகரிப்பதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட இந்திய கடல்சார் நிறுவனங்களுக்கு ஐரோப்பிய யூனியன் ஒப்புதல் அளித்துள்ளது.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக சக்தியான இந்தியாவும், ஐரோப்பிய யூனியனும், நெருக்கமான உறவை கொண்டுள்ளன. தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்கான பேச்சு, கடந்த 17 ஆண்டுகளாக இழுபறியாக இருந்து வந்தது.
ஒரு சில விவகாரங்களில் ஒருமித்த கருத்து ஏற்படாததை அடுத்து, 2013ல் இந்தப் பேச்சு நிறுத்தப்பட்டது.
பின்னர் 2022-ம் ஆண்டு ஜூனில் மீண்டும் பேச்சுவார்த்தைத் தொடங்கியது.
இந்த நிலையில், இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை டெல்லியில் நடைபெற்றது.
அப்போது கடல் உணவு வர்த்தகத்தை அதிகரிப்பதற்காக 102 இந்திய கடல்சார் நிறுவனங்களுக்கு ஐரோப்பிய யூனியன் ஒப்புதல் அளித்துள்ளது.
டிரம்ப்பின் வரி விதிப்பு மிரட்டல்களுக்கு மத்தியில் இது இந்தியாவுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.