ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ள நாட்டின் மிக நீளமான கண்ணாடி பாலம், வரும் 25ம் தேதி திறப்பு விழா காணவுள்ளது.
கேரளாவின் வாகமனில் உள்ள 125 அடி நீள கண்ணாடி பாலம், நாட்டின் மிக நீளமான கண்ணாடி பாலம் என்ற பெருமை பெற்றுள்ளது.
இதை மிஞ்சும் வகையில், ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில், கைலாசகிரி மலை உச்சியில், கடல் மட்டத்தில் இருந்து 862 அடி உயரத்தில், 180 அடி நீள கண்ணாடி பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
கடினமான எடைகளை தாங்கும் அளவுக்கு ஜெர்மன் கண்ணாடிகள் மூன்று அடுக்குகளாக இந்தப் பாலத்தில் பொருத்தப்பட்டுள்ளன.
மலை உச்சியில் இருப்பதால், மணிக்கு 250 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசினாலும், தாங்கும் அளவுக்கு இதன் கட்டுமானம் வலுவாகக் கட்டப்பட்டுள்ளது. இதற்காக 7 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது.
ஒரே நேரத்தில் 100 பேர் வரை இந்தப் பாலத்தில் நடந்து செல்ல முடியும். இருப்பினும், பாதுகாப்பு காரணங்களுக்காக ஒரு பேட்சில் 40 பேர் வரை மட்டுமே அனுமதிக்க முடிவு செய்யப்படுள்ளது. வரும் 25ம் தேதி, இந்தக் கண்ணாடி பாலத்தை ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு திறந்து வைக்கிறார்.