நேபாளத்தில் Gen-Z இளைஞர்களின் போராட்டத்தால் சர்மா ஒலியின் அரசாங்கம் ஆட்டம் கண்ட நிலையில், இந்தியாவில் கல்வி பயின்ற குல்மான் கிஷிங்கிற்கு இடைக்கால தலைவராகப் பொறுப்பேற்கும் வாய்ப்பு கிட்டியுள்ளது. யார் இந்தக் குல்மான் கிஷிங்?…இது குறித்த செய்தித்தொகுப்பைப் பார்க்கலாம்..
நேபாளத்தில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைதளங்களுக்குத் தடை விதித்த சர்மா ஒலி அரசு, ஆட்சியை விட்டு அகலும் சூழல் ஏற்பட்டது. சமூக வலைதளங்களுக்குத் தடை விதிப்பதை விரும்பாத Gen-Z இளைஞர்கள் வீதியில் இறங்கிப் போராட, பின்னர் அது கலவரமாக மாறியது. பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் போராட்டக்காரர்கள் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து விட, இளம் ரத்தங்கள் சூடேறின.
நேபாளக் குடியரசு தலைவர் ராம் சந்திரப் பவுடல், பிரதமர் சர்மா ஒலி ஆகியோரின் வீடுகளைச் சூறையாடி தங்கள் வெறியைத் தீர்த்துக்கொண்ட இளைஞர்கள், நாட்டின் நிதியமைச்சரை வீதியில் ஓட ஓட விரட்டியடித்தனர். இந்நாள் ஆட்சியாளர்கள் மட்டுமில்லை. முன்னாள் ஆட்சியாளர்களும் இளைஞர்களின் கோபத்தில் இருந்து தப்பவில்லை.
முன்னாள் பிரதமர்களின் வீடுகளையும் அடித்து நொறுக்கிய போராட்டக்காரர்கள், தீ வைத்தும் கொளுத்தி விட, உயிர்பலி ஏற்பட்ட சோகச் சம்பவமும் அரங்கேறியது. பதவியிலிருந்து விலகினால் மட்டுமே போராட்டக்காரர்களின் ஆத்திரம் அடங்கும் என்பதைப் புரிந்து கொண்ட சர்மா ஒலி, ராம் சந்திரப் பவுடல் ஆகியோர் ராஜினாமா செய்ய, அதன்பின்னரே கலவரம் ஓய்ந்தது.
இதனிடையே, நேபாளத்தில் ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், நாட்டை வழிநடத்தும் அடுத்த தலைவர் யார் என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. புதிதாகத் தேர்வாகும் தலைவர் இளைஞர்களை அரவணைத்துச் செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளதால், அப்படியான நபர் யார் என்ற கேள்வி நாட்டின் மூலை முடுங்கெங்கும் எழத் தொடங்கியுள்ளது.
இடைக்கால தலைவராக உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி சுசிலா கர்கி நியமிக்கப்படலாம் என்று ஊடகங்களில் செய்தி வெளியான நிலையில், அவருக்கு Gen-Z இளைஞர்கள் மத்தியில் ஆதரவு இல்லை எனக் கூறப்படுகிறது. தொலைக்காட்சி ஒன்றுக்குப் போராட்டக் குழுவினர் அளித்த பேட்டியின் மூலம், சுசிலா கர்கிக்கு எதிரான அதிருப்தி அப்பட்டமாக வெளிப்பட்டுள்ளது.
அப்படி என்றால் Gen-Z இளைஞர்களின் மனம் கவர்ந்த தலைவர்? யாருக்கு ஆதரவளிக்க அவர்கள் தயாராக இருக்கிறார்கள் என்ற கேள்வி எழுகிறதல்லவா? அந்த வரிசையில் தான் முன்னணியில் இருக்கிறார் குல்மான் கிஷிங்.
நேபாள இளைஞர்களின் அமோக ஆதரவு பெற்ற குல்மான் கிஷிங், நாட்டின் மின்பகிர்மான கழகத்தின் தலைமைச் செயல் அதிகாரியாகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். அடிப்படையில் மின் பொறியாளரான குல்மான கிஷிங், தமக்கு வழங்கிய பொறுப்புகளில் திறம்பட செயல்பட்டு, இளைஞர்கள் மத்தியில் வெளிச்சம் பெற்றவராக இருக்கிறார்.
குல்மான் கிஷிங்கின் கல்வி பருவம் சற்று ஆச்சரியம் அளிப்பதாக இருக்கிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஜாம்ஷெட்பூரில் கல்வி பயின்றதே அதற்குக் காரணம். ஜாம்ஷெட்பூரில் உள்ள கல்லூரியில் இளநிலை மின்பொறியாளராகப் பட்டம் பெற்ற குல்மான் கிஷிங், நேபாளத்தில் உள்ள திரிபுவான் பல்கலைக்கழகத்தில் முதுநிலைப் பட்டத்தை பெற்றார்.
1994 -ம் ஆண்டில் நேபாள மின்பகிர்மான கழகத்தில் ஊழியராகப் பணியை தொடங்கிய குல்மான், படிப்படியாக வளர்ந்து 2016-ம் ஆண்டில் நிர்வாக இயக்குனராகப் பதவி உயர்வு பெற்றார். நேபாளத்தில் நாள்தோறும் 18 மணி நேரம் மின்சாரம் இல்லாமல் மக்கள் புழுங்கிக் கொண்டிருக்க, அவர்களுக்கு விடியலாகக் குல்மான் கிஷிங் திகழ்ந்தார்.
இப்படிப்பட்ட பெருமைக்குச் சொந்தகாரரான குல்மான் கிஷிங், ஓய்வுபெறுவதற்கு 4 மாதங்களுக்கு முன் சர்மா ஒலி அரசால் பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்டார். கடந்த மார்ச் மாதம் இந்தச் சம்பவம் அரங்கேற அப்போதே நாட்டு மக்கள் கடும் ஆவேசமடைந்தனர். தங்களின் சுமை நீக்கிய ஒருவருக்கா இப்படி ஒரு கதி எனச் சர்மா ஒலி அரசை மக்கள் வெளிப்படையாக விமர்சிக்கத் தொடங்கினர்.
தற்போது சர்மா ஒலி பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், தங்களை ஆளச் சரியான நபர்க் குல்மான் சிங் தான் என இளைஞர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். மின்துறையில் கலக்கிய குல்மான் சிங், இடைக்காகத் தலைவராக பொறுப்பேற்றுச் சர்வதேச அரங்கில் ஒரு கலக்கு கலக்குவாரா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.