அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு மிகவும் நெருக்கமானவராகக் கருதப்பட்ட சார்லி கிர்க் என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். 4000-க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் முன்னிலையில் ஒரு பல்கலைகழக வளாகத்தில் மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்வில் பேசிக்கொண்டிருந்த போது இந்தப் படுகொலைச் சம்பவம் நடந்துள்ளது. சார்லி கிர்க் கொல்லப்பட்டது ஏன் ? கொலையாளி யார்? என்பது பற்றி இந்தச் செய்தித் தொகுப்பில் விரிவாகப் பார்க்கலாம்.
MAKE AMERICA GREAT AGAIN என்ற செயல் திட்டத்தின் முக்கிய முகமாக விளங்கிய 31 வயதான சார்லி கிர்க், அதிபர் ட்ரம்பின் நம்பிக்கைக்குரிய நபராக இருந்து வந்தார்.
தாராளவாத சார்பு கொண்ட அமெரிக்கக் கல்லூரிகளில் பழமைவாத கொள்கைகளைப் பரப்புவதை நோக்கமாகக் கொண்ட Turning Point USA அமைப்பின் நிர்வாக இயக்குனரான சார்லி கிர்க், தீவிரப் பழமைவாத கொள்கையுடையவர்.
சுமார் 850 க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் செயல்பாடுகளைக் கொண்டுள்ள இந்த அமைப்பு தொடர்ச்சியாக மாணவர்களுடன் கலந்துரையாடல் மற்றும் கேள்வி பதில் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.
சிறந்த பாட்காஸ்டரான சார்லி கிர்க்கை X-ல் 5.2 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்கள் பின்தொடர்கிறார்கள். இதை விட அதிகமாக டிக்-டாக்-கில் 7.3 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்கள் சார்லி கிர்க்-கைப் பின்தொடர்கிறார்கள்.
அமெரிக்கா மட்டுமின்றிச் சர்வதேச அளவிலும் குறிப்பிடத் தக்கச் சமூக ஊடக ஆளுமையாக வழங்கிய சார்லி கிரிக், சமீபத்தில் ‘American Comeback Tour’,என்ற நிகழ்ச்சியை தொடங்கும் திட்டத்தை அறிவித்திருந்தார். 15 நிகழ்ச்சிகளின் முதல் நிகழ்ச்சி,கடந்த புதன் கிழமை, Utah Valley பல்கலைக்கழகத்தில் நடைப் பெற்றது.
சார்லி கிர்க் நிகழ்ச்சியில் புகழ்ப்பெற்ற “Prove Me Wrong” என்ற பகுதியில் பார்வையாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்துக் கொண்டிருந்தார். கடந்த 10 ஆண்டுகளில் எத்தனைத் திருநங்கைகள் அமெரிக்காவில் பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர் ? என்ற கேள்வி சார்லி கிர்க்-கிடம் வைக்கப்பட்டது. சுமார் 4000 பார்வையாளர்களின் கைத் தட்டலுக்கு இடையே, அதிகமானவர்கள் என்று அவர் பதில் அளித்தார்.
ஏதோ சத்தம் கேட்க, தனது கழுத்தைத் தடவிய சார்லி கிர்க்,இரத்தம் வடிந்த நிலையில் சேரில் இருந்து கீழே சரிந்தார். அவரது பாதுகாப்பு அதிகாரிகள் அவரை ஸ்ட்ரெச்சரில் அழைத்துச் சென்றனர். என்ன நடக்கிறது என்று புரியாமல்,கூச்சலும் குழப்பமும் நிலவியது. நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் பதறிய படியே ஓடத் தொடங்கினர். இந்தக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலானது.
பழமைவாத செயல்பாட்டாளரான சார்லி கிர்க் ஒரு ஒற்றை தோட்டாவால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்றும், தொலைவில் இருந்து நூலகக் கட்டிடத்தின் மேலிருந்து சுடப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முழு கருப்பு நிற உடை அணிந்த, கருப்பு முகமூடியுடன் ஒருவர், நீண்ட கருப்பு துப்பாக்கியால் சுட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். சார்லி கிர்கை கொன்ற நபரைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக, FBI இயக்குனர்க் காஷ் படேல் கூறியுள்ளார்.
பழமைவாத மதிப்புகளுக்காகப் போராடிய “தியாகி” என்று தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், சுதந்திரம், ஜனநாயகம், நீதி மற்றும் அமெரிக்க மக்களுக்காகச் சார்லி கிர்ப் போராடினார் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்.
கிர்க்-க்கு மரியாதை செலுத்தும் வகையில் அமெரிக்கக் கொடி வரும் 14ஆம் தேதி வரை அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட வேண்டும் என்றும் அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். கடந்த ஆண்டுஅமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீது இரண்டு கொலை முயற்சி தாக்குதல்கள் நடந்தது குறிப்பிடத் தக்கது. அமெரிக்காவில் அரசியல் நோக்கங்களுக்காகப் படுகொலைகள் அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.