சென்னை காவல் ஆணையர் அலுவலகம் அருகே உள்ள ஈ.வெ.ரா.மணியம்மையார் சிலைக்கு மனு கொடுத்து, நூதனப் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களை போலீசார்க் கைது செய்தனர்.
சென்னை மாநகராட்சி மண்டலம் 5, 6 பகுதிகளுக்கான தூய்மைப் பணி, தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளதைக் கண்டித்தும், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் 5வது நாளாகத் தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 4 நாட்களாக 13 தூய்மைப் பணியாளர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வந்த நிலையில், வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகம் அருகே உள்ள ஈவெரா மணியம்மையார் சிலைக்கு மனு கொடுத்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்ட அவர்களை போலீசார்க் கைது செய்து காவல் வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தூய்மைப் பணியாளர்கள், கடந்த 5 நாட்களாகப் போராட்டம் நடத்தி வருவதாகவும், கைது நடவடிக்கையின்போது காயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் வேதனைத் தெரிவித்தனர்.
ஒவ்வொரு முறையும் போலீசார் கைது செய்து கழிப்பறையில் அடைத்துக் கொடுமைப்படுத்துவதாகவும், ஆபாச வார்த்தைகளால் பேசுவதாகவும் தூய்மைப் பணியாளர்கள் குற்றம் சாட்டினார்.