பஞ்சாப்பைப் புரட்டிப் போட்ட வெள்ளத்தால் அறுவடைக்குத் தயாராக இருந்த சுமார் ஒரு லட்சம் ஏக்கர்ப் பரப்பளவிலான நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன.
தொடர் கனமழை காரணமாகப் பஞ்சாப்பில் உள்ள பக்ரா, பியார் மற்றும் ரஞ்சித் சாகர் அணைகளில் இருந்து அதிகளவு தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
இதனால் பதான்கோட், குர்தாஸ்பூர் மற்றும் அமிர்தசரஸ் மாவட்டங்களில் உள்ள விளைநிலங்களில் வெள்ளநீர் புகுந்தது. பெருவெள்ளம் ஏற்பட்ட நிலையில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த பாசுமதி நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.
பஞ்சாப் மாநிலம் முழுவதும் 4 லட்சத்து 72 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான பயிர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் விவசாயிகளுக்குச் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவின் அரிசி உற்பத்தியில் சுமார் 12 சதவீத அரிசி , பஞ்சாப்பில் இருந்து கிடைக்கிறது. 2024-25ஆம் நிதியாண்டில் சுமார் 142 லட்சம் டன் அரிசியை உலகிற்குப் பஞ்சாப் கொடுத்தது.
குறிப்பாக உயர்தரப் பாசுமதி அரிசியை உற்பத்தி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது பஞ்சாப். இந்நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாகப் பஞ்சாப் மாநிலத்தில் பாசுமதி அரிசி உற்பத்தி பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.