சீனாவிடம் இருந்து இந்தியாவை விலக்க முயற்சிப்பதாக இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் செர்ஜியோ கோர் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார். இதேபோல் இந்தியாவிற்கு வருகை தந்த சீன வெளியுறவு அமைச்சா் வாங் யி, பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்தச் சந்திப்பு தொடர்பாக, இந்தியா-சீனா இருதரப்பு உறவுகள் பரஸ்பர மரியாதையுடன் மேம்பட்டு வருவதாகப் பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.
50% வரி விதிப்பால் அமெரிக்காவுடன் மோதல் ஏற்பட்டுள்ள சூழலில், இந்தியா – சீனா இடையிலான இந்த நெருக்கம், அதிபர் டிரம்ப்பை பதற்றம் அடைய வைத்துள்ளது.
இந்நிலையில், இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் செர்ஜியோ கோர், இந்தியாவை அமெரிக்காவின் பக்கம் இழுக்கவும், சீனாவிடம் இருந்து விலக்கவும் முயற்சித்து வருவதாகக் கூறியுள்ளார்.
சீன விரிவாக்கம் இந்தியாவின் எல்லையில் மட்டுமல்ல, முழு பகுதியிலும் உள்ளதாகவும், இந்திய அரசு மற்றும் மக்களுடன் அமெரிக்காவின் உறவு பல தசாப்தங்களாக நீண்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டி உள்ளார்.
அத்துடன் இந்தாண்டு இந்தியாவில் நடைபெறும் குவாட் உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பங்கேற்கத் திட்டமிட்டுள்ளதாகவும் செர்ஜியோ கோர் தெரிவித்துள்ளார்.