உலகின் மிகவும் மகிழ்ச்சியான நாடான பின்லாந்து, நிரந்தரக் குடியேற்றத்துக்கான கதவுகளைத் திறந்து வைத்துள்ளது. நிரந்தரமாகக் குடியேற விரும்பும் இந்தியர்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பை அந்நாடு வழங்கத் தொடங்கியுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா அனைத்துத் துறைகளிலும் சர்வ தேச அளவில் முன்னணியில் உள்ளது. விரைவில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாகும் என்று கணிக்கப் பட்டுள்ளது.
இருந்தாலும், வெளிநாட்டில் நிரந்தரக் குடியுரிமை பெறும் விருப்பம் இந்தியர்களிடையே அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டில் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்திய குடியுரிமையைத் துறந்துள்ளனர்.
2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் இருந்த எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது இது குறைவு தான் என்றாலும் வெளிநாட்டுக் குடியுரிமையை ஏற்றுக்கொள்ளும் இந்தியர்களின் மனநிலையையே இந்தப் புள்ளிவிவரம் காட்டுகிறது.
வெளிநாடுகளில் குடியேற விரும்பும் இந்தியர்களில் அமெரிக்கா, கனடா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளே முதலிடத்தைப் பிடித்துள்ளன. அதற்கு அடுத்த இடத்தில் பின்லாந்து உள்ளது.
ஆயிரக்கணக்கான ஏரிகள் மற்றும் காடுகளுடன் கூடிய இயற்கை அழகு, சுத்தமான, பாதுகாப்பான மற்றும் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட நகரங்கள், வடக்கு விளக்குகள் மற்றும் வெள்ளைக் கோடை இரவுகள், சிறந்த சுகாதாரம், கல்வி, வீட்டுவசதி மற்றும் சமூகப் பாதுகாப்பை ஆதரிக்கும் காரணங்களால்,பின்லாந்து உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் தொடர்ந்து 8-வது ஆண்டாக முதலிடத்தில் இருக்கிறது.
இந்நிலையில், பின்லாந்து, இந்தியர்களுக்கான நிரந்தரக் குடியேற்றத்துக்கான வாய்ப்பை வழங்கியுள்ளது. இந்த நிரந்தரக் குடியிருப்பு அனுமதி, எந்த கட்டுப்பாடுகளும் இல்லாமல் அந்நாட்டில் தங்க அனுமதி அளிக்கிறது.
பின்லாந்தில் காலவரையின்றி வேலைச் செய்யவும், குடும்பத்தை ஸ்பான்சர்ஷிப்பின் மூலம் அழைத்துக் கொள்ளவும், சுகாதாரம், சமூகப் பாதுகாப்பு, பள்ளிகள் மற்றும் ஓய்வூதியங்களைப் பெற்றுக்கொள்ளவும், ஷெங்கன் நாடுகளுக்கு விசா இல்லாமல் எப்போது வேண்டுமானாலும் பயணம் செய்யவும், அரசின் நிதியுதவி மற்றும் சலுகைகள், அரசின் வீட்டுவசதி உதவிகள் மற்றும் அரசு வங்கிகளில் கடன்களைப் பெற்றுக் கொள்ளவும் பின்லாந்து அனுமதி அளித்துள்ளது.
அந்நாட்டின் A-வகைக் குடியிருப்பு அனுமதிப்பத்திரத்தில் குறைந்தது 4 ஆண்டுகள் தொடர்ந்து பின்லாந்தில் தங்க இருக்கும் இந்தியர்களுக்கு நிரந்தரக் குடியுரிமை தரப்படுகிறது. இது வரும் ஜனவரியில் இருந்து 6 ஆண்டுகளாக மாற்ற படுகிறது. அதில் குறைந்தது தொடர்ந்து 2 ஆண்டுகள் பின்லாந்திலேயே தங்கியிருந்திருக்க வேண்டும்
குறைந்தபட்ச ஆண்டு வருமானம் 41.3 லட்சம் அல்லது பின்லாந்தில் அங்கீகரிக்கப்பட்ட முதுகலைப் பட்டம், இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம், அல்லது அந்நாட்டு உயர்நிலை மொழித் திறன் இருக்கும் இந்தியர்கள் இந்த நிரந்தரக் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக, காவல்துறைக் குற்றப் பதிவுகள் இல்லாமல் இருக்கவேண்டும். தற்போது மாணவர் விசா அல்லது தற்காலிக விசாவில் இருப்பவர்களும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.