நேபாளத்தில் ஏற்பட்ட போராட்டம் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது. இருந்தபோதிலும், நெபோ கிட்ஸ்-கள் மீதான அந்நாட்டு மக்களின் கோபம் இன்னமும் குறைந்ததாகத் தெரியவில்லை. என்ன காரணம்?. இந்தச் செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
சில நாட்களுக்கு முன்பு நேபாளத்தில் ஏற்பட்ட போராட்டம் ஒட்டுமொத்த உலகையே அதிரச் செய்தது. இந்தப் போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறையால் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்தப் போராட்டத்திற்கான பல காரணங்களில் ஒன்றாக அமைந்தவர்கள் நெபோ கிட்ஸ்.
நேபாளத்தில் வசிக்கும் நான்கில் ஒருவர் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளதாகக் கூறப்படுகிறது. அந்நாட்டு மக்களில் பலர் படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காமலும், உரிய கல்வி மற்றும் மருத்துவம் கிடைக்காமலும் தவித்து வருகின்றனர்.
ஆனால் மறுபுறம், அரசியல்வாதிகள் மற்றும் நேபாள மூத்த அதிகாரிகளின் குழந்தைகள் சொகுசான வாழ்க்கை நடத்தி வருகின்றனர். அவர்களில் பலர் நேபாளத்தில் நிலவும் வறுமையின் வாடையே தெரியாமல் வெளிநாடுகளில் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர்.
மேலும், வெளிநாடுகளில் தாங்கள் எங்கெல்லாம் பயணித்தோம், என்னென்ன உணவுகளை உட்கொண்டோம், எந்தெந்த பொருட்களை வாங்கினோம் என்பது குறித்து சோஷியல் மீடியாவில் அப்டேட் செய்வதை முக்கிய கடமையாகவே அவர்கள் மேற்கொண்டு வந்தனர்.
நேபாள இளைஞர்களின் கோபத்திற்கு இவையும் முக்கிய காரணமாக அமைந்தன. தற்போது போராட்டங்கள் ஓய்ந்துள்ள நிலையிலும், நெபோ கிட்ஸ்களின் வாழ்க்கைமுறைத் தொடர்ந்து பேசுபொருளாகவே இருந்து வருகிறது.
எந்தெந்த அமைச்சர்களின் குழந்தைகள், எத்தகைய ஆடம்பர வாழ்க்கை நடத்தினார்கள் என்பது குறித்த வீடியோவை பலர் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். மேலும், நெபோ கிட்ஸ்கள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்தபோது, நேபாளத்தில் சாதாரண மக்கள் எத்தகைய இன்னல்களை சந்தித்து வந்தார்கள் என்பதையும் அந்த வீடியோவில் அவர்கள் விளக்கியுள்ளனர்.
நேபாளத்தின் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் Birodh Khatiwada, முன்னாள் பிரதமர் Sher Bahadur Deuba, நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் தலைவர் Pushpa Kamal Dahal, முன்னாள் சட்ட அமைச்சர் Bindu Kumar Thapa உள்ளிட்டோரின் மகன்களும், மகள்களும் அதிக விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளனர். தங்களின் ஆடம்பர வாழ்க்கை குறித்து முந்தைய ஆண்டுகளில் அவர்கள் இணையத்தில் பகிர்ந்த புகைப்படங்கள், தற்போது மீண்டும் கவனம் பெற்று வருகின்றன.
நேபாள போராட்டம் அந்நாட்டின் நெபோ கிட்ஸ்களை மட்டுமல்ல, வறுமை சூழலில் உள்ள மற்ற நாடுகளின் நெபோ கிட்ஸ்களையும் கலக்கமடைய செய்துள்ளது. எனவே, தங்களது ஆடம்பர வாழ்க்கை குறித்து இணையத்தில் பகிர்வதை அவர்கள் முடிந்தவரை தவிர்த்து வருகின்றனர்.