தமிழக அரசின் தவறுகளையும் முறைகேடுகளையும் தட்டிக் கேட்டால் உயிர் இருக்காது என்று மறைமுக எச்சரிக்கை விடுப்பதுபோல் சமூக ஆர்வலர்களுக்குப் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாகச் சமூக ஆர்வலர்கள் கொலைச் செய்யப்படுவதும் கொடூரத் தாக்குதல்களுக்கு ஆளாவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர் மாவட்டம் கருகம்பாளையத்தில் உள்ள பள்ளி அருகே அந்தப் பரபரப்பான சம்பவம் நடந்தது. பழனிச்சாமி என்ற முதியவர் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அவருக்குப் பின்னால் வேகமாக வந்த கார் ஒன்று முதியவர் பழனிச்சாமி மீது மோதி தூக்கி வீசியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்தின் காரணமாகப் பழனிச்சாமி உயிரிழந்தார் எனப் பலரும் நினைத்திருந்த நேரத்தில்தான் திடுக்கிட வைக்கும் திருப்பங்கள் அரங்கேறின.
பழனிச்சாமியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் மங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் மூலமே ஒட்டுமொத்த உண்மையும் வெளிச்சத்திற்கு வந்தன. அப்படி என்னதான் இருந்தது அந்தப் புகாரில்…?
சாமளாபுரம் பேரூராட்சியின் தலைவராகத் திமுகவை சேர்ந்த விநாயகா பழனிச்சாமி பதவி வகித்து வருகிறார். ஆரம்பத்தில் மார்க்சிஸ்ட் கட்சியில் இருந்தவர் கடந்த முறை அக்கட்சி சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் சுயேச்சையாகப் போட்டியிட்டு வென்றார்.
பின்னர், திமுகவில் இணைந்த விநாயகா பழனிச்சாமி பேரூராட்சித் தலைவர்ப் பதவியை கைப்பற்றினார். இவர் மீது ஏற்கனவே பல்வேறு முறைகேடு புகார்கள் இருந்த நிலையில் மக்களுக்குப் பயன்பாடில்லாத தனியார் இடத்தில் சாலை அமைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாகத் திருப்பூர் ஆட்சியரிடம் சமூக ஆர்வலரான முதியவர் பழனிசாமி புகார் அளித்திருந்தார். இதனால் ஏற்பட்ட முன் விரோதமே கொடூரக் கொலையில் முடிந்தது.
கருகம்பாளையத்தில் உள்ள பள்ளி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பழனிச்சாமி மீது பின்னால் காரைவிட்டு மோதி விநாயகா பழனிச்சாமி கொடூரமாகக் கொலைச் செய்துள்ளார். இதனை விபத்து என்றே எல்லோரும் முதலில் நினைத்தனர். ஆனால் பழனிச்சாமி கொலைச் செய்யப்பட்டார் என்பது உறுதியாக விநாயகா பழனிச்சாமியைப் போலீசார் கைது செய்தனர்.
இப்படித் திமுக ஆட்சியில் தொடர்ச்சியாக அரங்கேறும் கொலைச் சம்பவங்களும் தாக்குதல்களும் சமூக ஆர்வலர்களை மட்டுமின்றிப் பொதுமக்களையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள வெங்களூர் கிராமத்தைச் சேர்ந்த அதிமுக முன்னாள் கவுன்சிலரான ஜெகபர் அலி தமிழ்நாடு அமெச்சூர்க் கபடி கழக மாவட்ட செயலாளராகவும், அதிமுக ஒன்றிய சிறுபான்மைப் பிரிவு செயலாளராகவும் இருந்து வந்தார்.
திருமயம், வெங்களூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில், கல் குவாரிகள், சாலைப் பிரச்னைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் உள்ளிட்டோரிடம் புகார் மனு அளித்ததுடன், நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்திருந்தார். ஒரு வெள்ளிக்கிழமை அன்று தொழுகை முடித்துக் கொண்டு வெங்களூர் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்ற ஜெகபர் அலி லாரி மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
உரிய அனுமதியின்றிச் சட்ட விரோதமாக நடந்த கல் குவாரி குறித்து புகார் அளித்த ஜெகபர் அலியைக் கல்குவாரி உரிமையாளர்கள் லாரி ஏற்றிக் கொலைச் செய்தது தெரிய வந்தது. கொலைத் தொடர்பாக முக்கிய குற்றவாளியான திமுகப் பிரமுகர் ராமையா காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
கார் மோதி கொலை, லாரி மோதி கொலை எனச் சமூக ஆர்வலர்களின் மரணங்கள் பலரையும் உலுக்கி எடுக்க இந்தப் பட்டியலோ நீண்டு கொண்டே செல்கிறது. ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஜான் பிரிட்டோ, தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ்த் திமுக அரசு நிர்வாகத்தில் நடைபெறும் பல்வேறு ஊழல் முறைகேடுகளைத் துணிவுடன் வெளிக்கொண்டு வந்தார். அவர் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்திய கும்பல் அதனைத் தடுக்க முயன்ற ஜான்பிரிட்டோவின் தாய் மீதும் கொடூரத் தாக்குதல் நடத்தியது.
தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு – கோவில்பத்துக் கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் கடந்த 2023 ஆம் ஆண்டு மணற்கொள்ளையைத் தடுக்க முயன்றார். ஆனால் அரசு அலுவலத்திற்குள்ளேயே புகுந்த மணற் கொள்ளையர்கள் லூர்து பிரான்சிஸைக் கொடூரமாக வெட்டிக் கொலை செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் முட்டம் கிராமத்தில் கள்ளத்தனமாகச் சாராயம் விற்றதை ஹரிஷ் மற்றும் ஹரிசக்தி என்ற இரண்டு இளைஞர்கள் தட்டிக் கேட்டனர். அவர்கள் இருவரையும் கள்ளச்சாராய வியாபாரிகள் கத்தியால் குத்திப் படுகொலை செய்தனர். முறைகேடுகளைத் தடுக்க நினைப்பவர்களுக்கும், சட்ட போராட்டம் நடத்தும் சமூக ஆர்வலர்களுக்குமே பாதுகாப்பு இல்லையென்றால் திமுக ஆட்சியில் சாமானிய மக்களின் நிலை என்ன? என்ற கேள்வியே பல்வேறு பகுதிகளில் இருந்தும் எதிரொலிக்கிறது.
மக்களுக்காகக் குரல் கொடுக்கும் சமூக ஆர்வலர்களின் பாதுகாப்புக்கும் இனியேனும் கொலை, தாக்குதல் சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கவும் தமிழக அரசு என்ன செய்யப் போகிறது என்ற கேள்வியும் சாமானிய மக்களின் குமுறலாக ஒலிக்கிறது.