கையெழுத்துப் பிரதிகளை பாதுகாக்கும் ஞான பாரதம் திட்டத்தின் ஒரு பகுதியாக ஞான பாரதம் போர்ட்டலை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
ஞான பாரதம் திட்டம் என்பது கல்வி நிறுவனங்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் தனியார் சேகரிப்பாளர்களிடம் உள்ள பாரம்பரிய இந்திய கையெழுத்துப் பிரதிகளை கணக்கெடுத்து, டிஜிட்டல் மயமாக்குவதை நோக்கமாகக் கொண்டது.
இந்தத் திட்டம் 2025 மத்திய நிதிநிலை அறிக்கையில் தேசிய கையெழுத்துப் பிரதி திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில், டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் மத்திய கலாச்சார அமைச்சகம் நடத்திய ஞான பாரதம் சர்வதேச மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டு, அங்கு நடைபெற்ற கையெழுத்து பிரதி கண்காட்சியை பார்வையிட்டார்.
அப்போது பழங்கால இந்தியர்கள் பயன்படுத்திய ஓலைச்சுவடிகள், கையெழுத்து பிரதிகள் மற்றும் அதை டிஜிட்டல் மயமாக்கப்பட்ட ஆவணங்களை அதிகாரிகள் அவருக்கு விளக்கிக் காண்பித்தனர்.
அதன்பிறகு, மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, கையெழுத்து பிரதிகளை டிஜிட்டல் மயமாக்கும் ஞான பாரதம் போர்ட்டலை தொடங்கி வைத்தார். இந்தப் போர்ட்டலை பயன்படுத்தி, உலக மக்கள் அனைவரும் இந்திய பாரம்பரியங்களை அறிந்து கொள்வதுடன், மாணவர்கள் படிப்பதற்கும் உபயோகப்படுத்திக் கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்..