கர்நாடக மாநிலம் ஹாசனில், விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின்போது லாரி மோதி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து தலா 2 லட்சம் ரூபாய் வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
மொசலே ஹோசஹள்ளி கிராமத்தை சேர்ந்த மக்கள் தேசிய நெடுஞ்சாலையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது எதிர் திசையில் வந்த லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்ததால் சாலை தடுப்பை தாண்டி ஊர்வலத்திற்குள் புகுந்தது.
இந்த விபத்தில் 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 25-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படுமென கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா அறிவித்துள்ளார்.
இந்த விபத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா 2 லட்ச ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.