மணிப்பூரில் 7 ஆயிரத்து 300 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
மிசோரத்தில் ஒன்பதாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, அங்கிருந்து விமானம் மூலம் மணிப்பூரின் இம்பால் நகருக்குச் சென்றார்.
அவரை மணிப்பூர் ஆளுநர் அஜய் குமார் பல்லா மற்றும் தலைமைச் செயலாளர் புனீத் குமார் கோயல் ஆகியோர் விமான நிலையத்தில் வரவேற்றனர்.
பின்னர், மணிப்பூர் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பிரதமர் மோடி சந்தித்தார். அங்கு அவர்களின் பாரம்பரிய தொப்பியை சிறுவன் ஒருவன் பிரதமர் மோடிக்கு அணிவித்தான். அதனைப் பிரதமர் மோடி நெகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டார்.
பின்னர் சுராசந்த்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி, சுமார் ஏழாயிரத்து 300 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். தொடர்ந்து மக்கள் மத்தியில் பிரதமர் மோடி உரை நிகழ்த்தினார்.
அப்போது, தைரியம் மற்றும் துணிச்சலுக்குப் பெயர் பெற்ற மாநிலம் மணிப்பூர் எனப் புகழாரம் சூட்டிய அவர், மணிப்பூரின் வளர்ச்சியை மேம்படுத்த மத்திய அரசு தொடர்ந்து பாடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும், மணிப்பூரின் ரயில் கட்டமைப்பை மேம்படுத்த மத்திய அரசு உறுதிபூண்டுள்ளதாகக் கூறிய பிரதமர் மோடி, மணிப்பூர் மாநிலத்தில் ரயில்வே திட்டங்களுக்கு 3 மடங்கு அதிக நிதி ஒதுக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.