ஜிஎஸ்டி வரி குறைப்பு நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் கிடைத்த வெற்றி என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் நடந்த வர்த்தகம் மற்றும் தொழிற்சங்கத்தின் கூட்டு மாநாட்டில், ஜிஎஸ்டி சீர்திருத்தம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், உணவுப்பொருட்கள் மீதான வரிச் சிக்கல்களுக்கு ஜிஎஸ்டி சீர்திருத்தம் மூலம் தீர்வு கண்டுவிட்டதாகத் தெரிவித்தார்.
ஜிஎஸ்டி சீர்திருத்தம் மூலமாக மாநில அரசுகளுக்குப் பலன் கிடைத்துள்ளதாகக் கூறிய அவர், ஜிஎஸ்டி வரி குறைப்பை பாராட்ட சிலருக்கு மனமில்லை எனவும் சாடினார்.
தொடர்ந்து பேசிய அவர், ஜிஎஸ்டி குறித்து ராகுல் காந்தி தேவையற்ற விமர்சனங்களை முன்வைத்ததாகக் குறிப்பிட்ட நிர்மலா சீதாராமன், நாட்டின் வளர்ச்சியில் பெரும் மாறுதல் ஏற்படுவதற்கான வாய்ப்பை ஜிஎஸ்டி சீர்திருத்தம் உருவாக்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.