பழங்குடி இனச் சமூகத்திற்கு செய்யப்பட்ட வரலாற்று அநீதியை சரிசெய்ய பாஜக உறுதி பூண்டுள்ளதாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அசாம் மாநிலம் கோலாகாட் பகுதியில் உள்ள நுமாலிகர் சுத்திகரிப்பு நிறுவனத்தில் பயோ எத்தனால் ஆலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆலையை பயன்பாட்டிற்காக பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். தொடர்ந்து புதிய பாலிப்ரொப்பிலீன் ஆலை பணிகளுக்காக பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
தொடர்ந்து மக்கள் மத்தியில் உரையாற்றிய அவர், பசுமை ஆற்றல் உற்பத்தியில் இந்தியா விரைவான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகத் தெரிவித்தார். சூரிய சக்தி ஆற்றலில் உலகின் முதல் ஐந்து நாடுகளில் இந்தியா உள்ளதாகவும் அவர் கூறினார். மேலும் மாற்று எரிபொருளுக்கான எத்தனால் ஆலை, பழங்குடியின மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனத் தெரிவித்தார். பயோ-எத்தனாலுக்கு மூங்கிலைப் பயிரிட விவசாயிகளுக்கு அரசு உதவும் என்றும் பிரதமர் மோடி கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், ஊடுருவல்காரர்களுக்குக் காங்கிரஸ் அரசு நிலம் வழங்கியதாகக் குற்றம் சாட்டினார். சட்டவிரோத ஆக்கிரமிப்புக்குக் காங்கிரஸ் பாதுகாப்பு அளித்ததாகவும் அவர் விமர்சித்தார். அதேபோல் வாக்கு வங்கியின் பேராசையில் அசாமின் மக்கள் தொகைச் சமநிலையை காங்கிரஸ் சீர்குலைத்ததாகக் கூறிய பிரதமர் மோடி, பழங்குடி சமூகத்திற்குச் செய்யப்பட்ட வரலாற்று அநீதியைச் சரிசெய்ய பாஜக உறுதிபூண்டுள்ளதாகத் தெரிவித்தார்.