ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது.
20 ஓவர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. தொடரின் 6வது லீக் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின.
டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தடுமாற்றத்துடன் விளையாடிய அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 127 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்களும், அக்சர் படேல் மற்றும் பும்ரா இருவரும் தலா 2 விக்கெட்களும் வீழ்த்தினர்.
இதனையடுத்துக் களமிறங்கிய இந்திய அணி, 3 விக்கெட்களை இழந்து 15.5 ஓவரிலேயே வெற்றி இலக்கை எட்டியது.
அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் அதிகபட்சமாக 47 ரன்களும், அபிஷேக் சர்மா மற்றும் திலக் வர்மா இருவரும் தலா 31 ரன்களும் எடுத்தனர்.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி புள்ளிப்பட்டியலில் 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது.
இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போட்டி முடிந்தவுடன் இரு அணி வீரர்களும் கைக்குலுக்கிக்கொள்ளவில்லை. இதனையடுத்து No Handshake என்ற வார்த்தை ட்ரெண்டாகி வருகிறது.
பாகிஸ்தான் அணிக்கு எதிராக பெற்ற வெற்றியை, ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் ஈடுபட்ட வீரர்களுக்கு அர்ப்பணிப்பதாக, இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
போட்டிக்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தாங்கள் துணை நிற்பதாக கூறினார்.
இந்திய அணி வெற்றிப்பெற்றதை தொடர்ந்து நாடு முழுவதும் மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லி, மும்பை, லக்னோ, பாட்னா, நாக்பூர், இந்தூர் என பல பகுதிகளிலும் கொண்டாட்டம் களைகட்டியது.
மக்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும், இந்திய அணியை பாராட்டி முழக்கங்கள் எழுப்பியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.