2026-ம் ஆண்டில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்களுக்குக் குட்பை…… அவசரப்பட்டுச் சந்தோஷபட வேண்டாம்…. ஏன்னா இங்கே இல்லப்பா நம்ம நார்வே நாட்டில் தான் நடைமுறைக்கு வருகிறது.
உலகில் மின்சார வாகனங்களின் உற்பத்தி மற்றும் அதன் பயன்பாடு அதிகரித்து வருகிறது.இந்தியாவிலும் மின்சார வாகனங்களின் விற்பனை அண்மைக்காலமாக உயர்ந்து வருகிறது. இருப்பினும், போதிய சார்ஜிங் நிலையம் இல்லாததால் பல்வேறு நாடுகளிலும் மின்சார வாகனங்களை வாங்குவதில் தயக்கம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில், நார்வே நாட்டில் மின்சார வாகனங்களின் பயன்பாடுகளை அதிகரிக்கும் வகையில், புதிய முயற்சியாக உலகிலேயே முதல் முறையாக, மின்சார வாகனங்களுக்கான வயர்லெஸ் சார்ஜிங் சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது.
வயர்லெஸ் சார்ஜிங் அமைப்பில் மின்காந்த தூண்டல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. சாலையில் காப்பர் கம்பிகள் பதிக்கப்பட்டு, அதன்மூலம் உருவாகும் மின்காந்த புலன்கள், வாகனங்களுக்கு மின் ஆற்றலை நேரடியாக வழங்கும் வகையில் சார்ஜிங் சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இதன்மூலம் மின்சார வாகனங்கள் சாலையில் செல்லும்போது சார்ஜ் செய்ய முடியும். முதற்கட்டமாக நார்வேயின் ட்ரோன்ட்ஹெய்ம் உள்ளிட்ட முக்கிய சாலைகள் வயர்லெஸ் சார்ஜிங் சாலைகளாக மாற்றப்பட்டு வருகின்றன.
நடப்பாண்டு இறுதிக்குள் பணிகள் நிறைவடைந்து, அடுத்தாண்டு தொடக்கத்தில் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.