ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஹசாரிபாக் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில், மாவோயிஸ்ட் தலைவர் சஹ்தேவ் சோரன் உட்பட மூன்று நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
சஹ்தேவ் சோரன் உயிருக்கு ஒரு கோடி ரூபாய் வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் 25 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்த ரகுநாத் ஹெம்பிராம் மற்றும் 10 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்த பிர்சென் கஞ்சு ஆகியோரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதன்மூலம் மூன்று நக்சல்களை வீழ்த்தி கோப்ரா பட்டாலியன் வீரர்கள் ஒரு கோடியே 35 லட்சம் ரூபாயை வெகுமதியாகப் பெற்றனர்.
கடந்த 4 நாட்களில் ஒரு கோடி ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்ட 2 நக்சல் மற்றும் மாவோஸ்ட் தலைவர்களை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர். அனைத்து நக்சல்களும் பிடிபடும் வரை அல்லது கொல்லப்படும் வரை பிரதமர் மோடியின் அரசு ஓயாது என உள்துறை அமைச்சர் அமித் ஷா சூளுரைத்திருந்தார்.
அதன்படி பல்வேறு மாநிலங்களில் நக்சல்களுக்கு எதிரான போராட்டம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 11-ம் தேதி சத்தீஸ்கர் மாநிலம் கரியாபந்த் மாவட்டத்தில் நக்சலைட் மற்றும் பாதுகாப்பு படை வீரர்களுக்கு இடையே துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது. இதில் 10 நக்சல்கள் கொல்லப்பட்டனர்.
குறிப்பாக ஒரு கோடி ரூபாய் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்ட நக்சல் மூத்த தலைவர் மனோஜ் என்பவரும் கொல்லப்பட்டார்.
இந்நிலையில், ஜார்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் மாவட்டத்தில் பதுங்கியிருந்த நக்சல்களை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டனர்.