டிரம்பின் வரிவிதிப்புக்கு மத்தியிலும் இந்தியாவின் ஏற்றுமதி ஆகஸ்ட் மாதத்தில் 6.7 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இந்திய இறக்குமதி பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் 50 சதவீதம் வரி விதித்தார். இதனால், இந்தியாவின் ஏற்றுமதி பாதிக்கப்படும் என வல்லுநர்கள் எச்சரித்தனர்.
இருப்பினும், ஆகஸ்ட் மாதத்தில் இந்திய பொருட்களின் ஏற்றுமதி 6.7 சதவீதம் அதிகரித்து 35.1 பில்லியன் டாலராக உள்ளது. அதேநேரம் இறக்குமதி 10.12 சதவீதம் குறைந்து 61.59 பில்லியன் டாலராக உள்ளது.
நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை கடந்தாண்டு இதே மாதத்தில் 35.64 பில்லியன் டாலராக இருந்த நிலையில் தற்போது 26.49 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது.
இதுகுறித்துக் கருத்து தெரிவித்த மத்திய வர்த்தகச் செயலாளர் சுனில் பர்த்வால், உலகளாவிய மற்றும் வர்த்தகக் கொள்கை நிச்சயமற்ற தன்மைகள் இருந்தபோதும், இந்தியாவின் ஏற்றுமதியாளர்கள் மிகச் சிறப்பாகச் செயல்பட்டுள்ளதாகப் பாராட்டியுள்ளார்.