மேற்குலக நாடுகளின் பொருளாதாரத் தடைகளில் இருந்து தப்பிக்க நினைக்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்காகப் பண்டப்பரிமாற்ற முறையை மீண்டும் அறிமுகப்படுத்தி இருக்கிறது ரஷ்ய அரசு. இதுகுறித்துப் பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில்…
உக்ரைன் உடனான போரை முடிவுக்குக் கொண்டு வர ரஷ்யாவுக்குப் பொருளாதார தடை விதித்தால் மட்டுமே சரிபட்டு வரும் என நினைத்த மேற்குலக நாடுகள், இதுவரை 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வர்த்தகத் தடைகளை விதித்துள்ளன. வங்கி பரிவர்த்தனைகளுக்கும் ஏராளமான கட்டுப்பாடுகளை விதித்து விட, ரஷ்யா பொருளாதாரம் ஆட்டம் காண தொடங்கின.
ஆனால் ரஷ்யாவுக்கு மட்டுமா இந்தப் பாதிப்பு? இயற்கை வளங்கள் நிறைந்து காணப்படும் நாட்டுடன் வர்த்தகம் தடைபட்டால், யாருக்குத் தான் இழப்பு ஏற்படாது? எந்த ஒரு பொருளையும் உற்பத்தி செய்வதற்குக் கனிமங்கள் வேண்டும் தானே? என உலகளவில் செயல்படும் தொழில் நிறுவனங்கள் கண்ணீர் வடிக்கத் தொடங்கின.
ஆனால், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரத் தடையை மீறி என்ன செய்துவிட முடியும்? 3 ஆண்டுகளாக நீடித்து வரும் ரஷ்யா – உக்ரைன் போர் எப்போது முடிவுக்கு வருமோ எனப் பல நாடுகள் விழி வைத்து காத்திருக்கின்றன.
2022 ஆண்டில் பணப்பரிவர்த்தனைக்கு உதவும் SWIFT PAYMENT SYSTEM-ல் இருந்து ரஷ்யா வங்கிகளில் நீக்கப்பட, சர்வதேச தொழில் நிறுவனங்கள் செய்வதறியாது திகைத்தன. குறிப்பாக, சீன வங்கிகள் மேற்குலக நாடுகளின் மிரட்டலுக்கு அடிபணிந்து போக அந்நாட்டில் செயல்படும் நிறுவனங்கள் விழிபிதுங்கி நிற்கின்றன.
இப்படி இருதரப்புகளிலும் பாதிப்புகள் பலமாக இருக்க, என்ன செய்யலாம் என யோசித்த ரஷ்யா, பண்டைக் கால வர்த்தக நடைமுறையை மீண்டும் அறிமுகப்படுத்தி தீர்வு காணும் முயற்சியில் இறங்கியது.
பணப்பரிவர்த்தனையை வைத்து தானே பொருளாதாரத்தை முடக்கப் பார்க்கிறீர்கள் என நினைத்த ரஷ்யா, பண்டைக் கால நடைமுறையைப் பின்பற்றினால் என்ன செய்வீர்கள் என ரூட்டை மாற்றியது. . அப்படி என்னவாக இருக்கும் என யோசிக்கிறீர்களா? பண்டப்பரிமாற்ற முறைதான் .
இதற்காக 14 பக்கங்கள் கொண்ட வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட ரஷ்ய அரசு, பொருளாதாரத் தடைகளில் இருந்து தப்பிக்க நினைக்கும் நிறுவனங்கள், இதனைப் பின்பற்றுமாறு அழைப்பு விடுத்தது. அதில் வெற்றியும் கண்டுள்ளது.
சீனாவைச் சேர்ந்த Hainan Longpan Oilfield Technology நிறுவனம் தங்களுக்குத் தேவையான எஃகு மற்றும் அலுமினிய மெட்டல்களை வாங்க முனைப்பு காட்ட, அதற்கு மாற்றமாக MARINE என்ஜின்களை ரஷ்யா வாங்கியுள்ளது. மற்றுமொரு வர்த்தகத்தில் சீனக் கார்களுக்கு பதிலாக ரஷ்யக் கோதுமையை வழங்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
சீனாவில் தயாராகும் வீட்டு உபயோகப் பொருட்களுக்கு ரஷ்யாவின் ஆளி விதைகளை வழங்கிய வர்த்தகமும் நடைபெற்றுள்ளது. இதுகுறித்துத் தகவல் கசிந்த போதும் சம்பந்தபட்ட நிறுவனங்களும், ரஷ்ய அரசும் அமைதி காத்து வருகின்றன.
பண்டப்பரிமாற்ற முறை பொருளாதாரத் தடைகளை நீக்கும், பரிவர்த்தனைகளைச் சுமூகமாக்கும் என ரஷ்யா நம்பிக்கையுடன் காத்திருக்க, அமெரிக்கா அதிர்ச்சியில் உறைந்துள்ளது.
பண்டப்பரிமாற்ற முறையால் அமெரிக்காவின் டாலர் மதிப்பு குறைந்து விடும் என அச்சமடைந்துள்ள ட்ரம்ப் நிர்வாகம், நமக்கே நாமே ஆப்பு வைத்துக்கொண்டோமோ எனப் பதில் நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியுள்ளது.