இந்திய பெருங்கடலில் கண்காணிப்பு மற்றும் நீர்மூழ்கி கப்பலின் நடமாட்டத்தைக் கண்டறியும் வகையில், அமெரிக்காவிடம் இருந்து பி-8ஐ ரக விமானங்களை வாங்க முடிவு செய்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தும்படி அறிவுறுத்திய அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்திய இறக்குமதி பொருட்கள் மீது 50 சதவீத வரியை விதித்தார்.
இதனால், இந்தியா – அமெரிக்கா வர்த்தக உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், இந்தியாவுடன் மீண்டும் சுமூக உறவை மேம்படுத்த அமெரிக்கா தொடர்ந்து முயற்சித்து வருகிறது.
இந்நிலையில், அமெரிக்காவிடம் இருந்து பி-8ஐ’ ரகத்தைச் சேர்ந்த ஆறு கண்காணிப்பு விமானங்களை வாங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கக் குழு விரைவில் டெல்லி வரவுள்ளதாகவும், இரு தரப்பினரும் 35 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தை இறுதி செய்வார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.
2021ஆம் ஆண்டு இந்தியாவுக்குப் பி8 – ஐ ரக விமானத்தை விற்க அமெரிக்க அரசு அளித்துள்ள அனுமதியின் அடிப்படையில் ஒப்பந்தத்தை இறுதி செய்ய அமெரிக்கப் பிரதிநிதிகள் குழு டெல்லி வருவதாக மத்திய அரசு கூறியுள்ளது.