அக்டோபர் மாதத்தில் இருந்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என அக்கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அக்கரை பகுதியில் நடைபெற்ற பாஜகச் சிந்தனை அமர்வு கூட்டத்தில் அக்கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலைக் கலந்து கொண்டு நிர்வாகிகள் இடையே உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், அக்டோபர் மாதத்தில் இருந்து தமிழகத்தின் அனைத்துச் சட்டமன்ற தொகுதிகளிலும் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என்றும், மாவட்டம்தோறும் காலை நேரத்தில் முக்கிய நிர்வாகிகள் மற்றும் சமுதாயத் தலைவர்களைச் சந்தித்து ஆலோசனை நடத்துவார் எனவும் கூறியுள்ளார்.
ஒவ்வொரு நாளும் 2 அல்லது 3 சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட இடங்களில் நயினார் நாகேந்திரன் பிரசாரம் மேற்கொள்வார் என்றும், நாள்தோறும் பிரச்சாரம் மேற்கொள்ளும் 3வது இடத்தில் பொதுக்கூட்டம் நடைபெறும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
150 சட்டமன்ற தொகுதிகளில் பிரச்சாரத்தை நிறைவு செய்துள்ள எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணத்தில் எதிர்பார்த்ததைவிட மக்கள் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டதாகவும் கூறினார்.
சுற்றுப் பயணத்தின்போது இபிஎஸ் பேச்சு பாஜகவைப் பாராட்டும் வகையில் இருந்தது எனக்கூறிய அண்ணாமலை, 2017ல் அதிமுகவின் ஆட்சியைப் பாஜக காப்பாற்றியது என்று எடப்பாடி பழனிசாமி பேசியது முக்கியத்துவம் வாய்ந்தது எனக் குறிப்பிட்டார்.
மேலும், தமிழகம் முழுவதும் மேற்கு, டெல்டா, தென் தமிழகம் என அனைத்து இடங்களிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர்கள் இணைந்து கூட்டுப் பிரச்சாரத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக அண்ணாமலைத் தெரிவித்துள்ளார்.