மதுரையில் கேட்டரிங் செய்ததற்கான பணத்தைக் கொடுக்காமல் சாதி ரீதியாக இழிவுபடுத்தி பேசிய திமுக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்ட தம்பதியர் கண்ணீர் மல்கக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை எல்லிஸ் நகர் பகுதியை சேர்ந்த கார்த்திக், கேட்டரிங் சர்வீஸ் சென்டர் நடத்தி வருகிறார். இவரை தொடர்புகொண்ட மாநகரத் திமுக அவைத்தலைவர் ஒச்சு பாலு, கோயில் திருவிழாவுக்காகக் கேட்டரிங் பணிகளை செய்துதருமாறு கேட்டுள்ளார்.
இதற்கு ஒப்புக்கொண்ட கார்த்திக், சுமார் 10 ஆயிரம் பேருக்குச் சமையல் தயாரித்து வழங்கியுள்ளார். திருவிழா முடிந்த பின்னர், தனக்கு வரவேண்டிய பணத்தை வழங்குமாறு ஒச்சு பாலுவிடம் கார்த்திக் கேட்டுள்ளார்.
அதற்கு, சமையலில் உப்பு குறைவாக இருந்ததாகக் கூறி பணம் கொடுக்க ஒச்சு பாலு மறுத்துள்ளார். மேலும், கார்த்திக்கைச் சாதி பெயரை சொல்லி அவதூறாகப் பேசியதாக கூறப்படுகிறது.
இதனால், பணியாளர்களுக்கு ஊதியம் கொடுக்க முடியாமல் தவித்த கார்த்திக், இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனது மனைவியுடம் கண்ணீர் மல்க புகாரளித்தார். இதற்கிடையே, பணம் கேட்கச் சென்ற கார்த்திக்கை, பாலு மிரட்டுவது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.