இந்திய அரசுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்த முன்வந்துள்ள மாவோயிஸ்டுகள், தங்கள் ஆயுதப் போராட்டத்தை கைவிட தயாராக உள்ளதாகவும் அறிவித்துள்ளனர். இதுபற்றி விவரிக்கிறது இந்தச் செய்தி தொகுப்பு.
கடந்த 2004-ம் ஆண்டு PEOPLE’S WAR GROUP மற்றும் MAOIST COMMUNIST CENTRE OF INDIA ஆகிய இயக்கங்களின் இணைவால் உருவான இயக்கமே, மாவோயிஸ்டு கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆஃப் இந்தியா (COMMUNIST PARTY OF INDIA – MAOIST). மாவோ சே துங் கருத்தியலை அடிப்படையாகக் கொண்டு ஆயுதப் போராட்டத்தின் வழியில் இந்தியாவில் புதிய ஜனநாயகப் புரட்சியை ஏற்படுத்த வேண்டும் என்பதே இந்த இயக்கத்தின் முக்கிய குறிக்கோளாகும்.
இவர்கள் வனப்பகுதிகளுக்கு அருகே வாழும் பழங்குடியினரின் ஆதரவைப் பெற்று இந்திய அரசுக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தை நடத்தி வருவதால், அவர்களை உள்நாட்டுத் தீவிரவாத அமைப்பாக அறிவித்துள்ள இந்திய அரசு இந்த இயக்கத்தை நாடு முழுவதும் தடைச் செய்து அவர்களை ஒடுக்கப் பாதுகாப்பு படையினரை முடுக்கி விட்டுள்ளது.
இந்நிலையில், தற்போது அரசுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்த முன்வந்துள்ள மாவோயிஸ்டுகள், ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டு அரசியல் தளத்தில் இணைய சம்மதிப்பதாக அறிவித்துள்ளனர். அந்த இயக்கத்தின் மூத்த தலைவரான அபய் என்கிற மல்லோஜுலா வேணுகோபால் ராவ் இது குறித்து வெளியிட்டதாகக் கூறப்படும் அறிக்கையில், ஒரு மாத இடை நிறுத்தத்தை இந்திய அரசு அறிவிக்க வேண்டும் எனவும், நடந்து வரும் தேடுதல் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் பாதுகாப்புப் படைகள், பல முக்கிய மாவோயிஸ்டு தலைவர்களைச் சுட்டுக் கொன்றுள்ளன. குறிப்பாக, கடந்த மே மாதம், இந்த மாவோயிஸ்டு அமைப்பின் பொதுச்செயலாளராக இருந்த நம்பாலா கேசவ ராவ் என்கிற பசவராஜுவை, சத்தீஸ்கர் மாநிலத்தின் நாராயண்பூர்க் காட்டில் பாதுகாப்பு படையினர்ச் சுட்டுக் கொன்றனர். அதன் பின், சஹதேவ் சோரேன், ரகுநாத் ஹெம்ப்ரம், வீர்சேன் காஞ்சு, மோடேம் பாலகிருஷ்ணா உள்ளிட்ட பலரும் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்தச் சூழ்நிலையில், மாவோயிஸ்டு மூத்த தலைவர் அபய் வெளியிட்டுள்ளதாகக் கூறப்படும் அந்த அறிக்கையில், நாட்டின் பிரதமர், உள்துறை அமைச்சர் மற்றும் பல உயர்மட்ட அதிகாரிகள் தொடர்ச்சியாக ஆயுதங்களைக் கைவிட்டு, அரசியல் களத்தில் இணைவதை வலியுறுத்தி வந்த நிலையில், தாங்களும் காலத்திற்கேற்ப மாற முடிவெடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தங்களது கோரிக்கையை ஏற்று அரசு இடைநிறுத்தத்தை அறிவிக்கும் பட்சத்தில், தாங்களும் தங்கள் தலைவர்களுடன் கலந்தாலோசித்து ம்த்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அல்லது அவர் நியமிக்கும் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வழி அமைப்போம் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 15-ம் தேதியிட்ட அந்த அறிக்கையின் நம்பகத்தன்மையைச் சத்தீஸ்கர் அரசு சரிபார்த்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், மாவோயிஸ்டுகள் நிபந்தனைகளுடன் பேச்சுவார்த்தை நடத்த கோரியுள்ளதற்குச் சத்தீஸ்கர் அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதற்கிடையே “ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு அரசின் மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் இணைவதே, மாவோயிஸ்டுகள் ஜனநாயகத்தில் இணைவதற்கான சிறந்த வழி” என மாநில துணை முதல்வரும், உள்துறை அமைச்சருமான விஜய் சர்மா தெரிவித்துள்ளார்.
அதே நேரம், முதல்முறையாக ஆயுதங்களை முழுமையாகக் கைவிடுவதாகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ள நிலையில், இந்த அறிக்கை உண்மையானதாக இருக்க வாய்ப்புள்ளதாக உளவுத்துறை அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர். பிரதமர், உள்துறை அமைச்சரை நேரடியாகக் குறிப்பிட்டிருப்பது இந்த விவகாரத்தில் புதிய முன்னேற்றம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். மொத்தத்தில், பல ஆண்டுகளாக நீடித்து வந்த மாவோயிடுகளின் ஆயுதப் போராட்டம் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அவர்களின் இந்த அறிவிப்பு இந்திய அரசியல் களத்தில் ஒரு புதிய திருப்பமாக இருக்கும் எனப் புவிசார் அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
















