ஹாலிவுட் நடிகையான சிட்னி ஸ்வீனி விரைவில் பாலிவுட் திரைத்துறையில் அறிமுகமாகவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில், அவருக்குத் திரைப்படத்தில் நடிக்க 530 கோடி ரூபாய் வரைச் சம்பளம் வழங்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது. இது பற்றிச் சற்று விரிவாக இந்தச் செய்தி தொகுப்பில் காணலாம்…
அமெரிக்காவைச் சேர்ந்த நடிகையான சிட்னி ஸ்வீனி, ‘யூபோரியா’ (EUPHORIA), ‘எவ்ரிதிங் சக்ஸ்’ (EVERYTHING SUCKS), ‘வைல்ட் லோட்டஸ்’ (WILD LOTUS) போன்ற தொடர்களில் நடித்ததன் மூலம் சர்வதேச அளவில் பிரபலமடைந்தார். அண்மையில் இவர் நடித்த ‘எக்கோ வேலி’ (ECHO VALLEY) என்ற திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது ‘கிறிஸ்டி’ (CHRISTY) என்ற புதிய திரைப்படத்தில் அமெரிக்கக் குத்துச்சண்டை வீராங்கனையான கிறிஸ்டி மார்டினின் கதாப்பாத்திரத்தில் சிட்னி நடித்து வருகிறார்.
இந்நிலையில், உலகின் மிக அதிகப் பொருட்செலவில் உருவாக்கப்படவுள்ள இந்திய திரைப்படம் ஒன்றில் நடிக்க, ஹாலிவுட் பிரபலமான நடிகைச் சிட்னி ஸ்வீனி ஒப்பந்தமாகியுள்ளதாகப் பல சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்காக அவருக்கு 45 மில்லியன் பவுண்டுகள் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 530 கோடி ரூபாய் வரைச் சம்பளம் வழங்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் சுமார் 35 மில்லியன் பவுண்டுகள் வரைச் சம்பள தொகையாகவும், 10 மில்லியன் பவுண்டுகள் ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தங்களாகவும் வழங்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
திரைப்படத்தில் ஒரு அமெரிக்கக் கதாப்பாத்திரமாக நடிக்கவுள்ள சிட்னி ஸ்வீனி, இந்திய பிரபலம் ஒருவரைக் காதலிக்கும் கதாப்பாத்திரமாகத் திரையில் தோன்றுவார் எனத் தகவல்கள் கசிந்துள்ளன. 2026-ம் ஆண்டு தொடக்கத்தில் நியூயார்க், பாரிஸ், லண்டன், துபாய் போன்ற பல சர்வதேச நகரங்களில் இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாகத் தெரிகிறது. இந்நிலையில், திரைப்படத்தில் நடிக்க அவருக்கு வழங்கப்படவுள்ள சம்பளத் தொகையைக் கேட்டு நடிகைச் சிட்னி ஸ்வீனியே அதிர்ந்து போய்விட்டதாகவும், இந்த வாய்ப்பு உலகளவில் அவரைப் பிரபலமடைய செய்யும் என்றும், அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
திரைப்படத்தின் கதைக்களம் சுவாரஸ்யமாக உள்ள போதிலும், இந்த வாய்ப்பை ஏற்க வேண்டுமா இல்லையா என்பது பற்றிச் சிட்னி தொடர்ந்து சிந்தித்து வருவதாகவும், இது பற்றி அவரது பிரதிநிதிகள் இன்னும் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்திய சினிமாவை உலக அரங்கில் உயர்த்தும் ஒரு வாய்ப்பாக இந்த முயற்சி அமையுமா என்பதைக் காண ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், சர்வதேச அளவில் பரவலான ரசிகர்கள் வட்டத்தைக் கொண்டுள்ள நடிகைச் சிட்னி ஸ்வீனி, இந்தப் பாலிவுட் பட வாய்ப்பை ஏற்பாரா என்பதே ரசிகர்கள் மத்தியில் தற்போது பெரும் ஆவலை ஏற்படுத்தியுள்ளது.