சென்னை அசோக் நகரில் தாமதமாக நடைபெறும் மழைநீர் வடிகால் பணிகள் தொடர்பாகச் செய்தி சேகரிக்கச் சென்ற தமிழ் ஜனம் செய்தியாளர் குழு மீது திமுக கவுன்சிலரின் மகன் தாக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பருவமழை காலங்களில் மழைநீர் தேங்கும் இடங்களை கண்டறிந்து சென்னை மாநகராட்சி மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. சில இடங்களில் மழைநீர் வடிகால் பணிகள் தாமதமாக நடைபெறுவதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டி வரும் நிலையில், அசோக் நகர் 10வது மெயின் ரோட்டில் ஆமை வேகத்தில் நடைபெறும் பணிகள் குறித்து செய்தி சேகரிக்கத் தமிழ் ஜனம் செய்தியாளர் சென்றார்.
அப்போது, அங்கு 131வது வார்டு திமுக கவுன்சிலர் கோமதி மணிவண்ணனின் மகன் செந்தில், செய்தியாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், ஒளிப்பதிவாளரை தாக்க முயன்றுள்ளார். மேலும், தமிழ் ஜனம் செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளரை ஆபாசமாகப் பேசியுள்ளார். இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.