பட்டியலினத்தவர்களின் சடலங்களை பொதுப்பாதையில் எடுத்துச் செல்லவிடாமல் பிற சமூகத்தினர் தடுப்பது தொடர்பான விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அறிக்கையாகத் தாக்கல் செய்யத் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியருக்கு, பட்டியலின மற்றும் பழங்குடியினர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், மோத்தக்கல் கிராமத்தில் பட்டியலினத்தவர்களின் சடலங்களை பொது பாதையில் எடுத்துச்செல்ல விடாமல் பிற சமூகத்தினர் தடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாகத் தமிழ்நாடு பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.
அப்போது, பட்டியல் சமூகத்தினரின் உடல்களை பொது பாதையில் எடுத்துச் செல்வதை தடுப்பது வன்கொடுமை தடுப்பு சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம் என ஆணையம் தெரிவித்தது.
மேலும், பட்டியலினத்தவர்களின் விவகாரத்தில் எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளருக்கு ஆணையம் உத்தரவிட்டு, விசாரணையை வரும் 29ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தது.