காஞ்சிபுரம் சுற்றுவட்டாரத்தில் பெய்த கனமழையால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் அவதியடைந்தனர்.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக காஞ்சிபுரம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் மழை பெய்யுமென வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் காஞ்சிபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் அவதியடைந்தனர்.
சேலம் சுற்றுவட்டார பகுதிகளில் பகல் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், மாலை வேளையில் 1 மணி நேரத்துக்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகனங்களை இயக்க முடியாமல் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். மேலும், மழையால் சாலையோர வியாபாரிகளும் பாதிப்புக்கு ஆளாகினர்.
சென்னையின் புறநகரான தாம்பரம் சுற்று வட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். பல்லாவரம், குரோம்பேட்டை, அனகாபுத்தூர், பெருங்களத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் அரைமணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால் வாகன ஓட்டிகளும், பணி முடிந்து வீடு திரும்பியவர்களும் கடும் அவதியடைந்தனர்.
இதேபோல் திருவண்ணாமலை சுற்றுவட்டார பகுதிகளிலும் காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நிலையில் மாலையில் அரை மணி நேரத்துக்கு மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
இதேபோன்று, திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.