இந்து கடவுளை அவமதித்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அனைத்து கடவுள்களையும் தான் மதிப்பதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் விளக்கம் அளித்துள்ளார்.
மத்திய பிரதேசத்தில் உள்ள ஜவாரி கோயிலில் உள்ள விஷ்ணுவின் சிலையை மறுகட்டமைப்பு செய்து 7 அடி உயர சிலையாக நிறுவ வேண்டும் எனக்கோரி உச்சநீதிமன்றத்தில் ராகேஷ் தலால் என்பவர் பொதுநலமனு தாக்கல் செய்தார்.
இதை விசாரித்த தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், விளம்பர நோக்கத்துடன் மனுவானது தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகவும், இந்த விவகாரத்திற்கு தங்கள் கடவுளிடமே பதில் கோருங்கள் எனவும் கூறினார்.
மேலும், விஷ்ணுவின் தீவிர பக்தர் என்றால், அவரை வழிபட்டு தியானம் செய்யுங்கள் எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.
அவரது கருத்துக்கு கடும் விமர்சனம் எழுந்த நிலையில், பி.ஆர்.கவாயின் பேச்சு, இந்து மதத்தை புண்படுத்தும் வகையில் இருந்ததாக விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் தலைவர் ஆலோக் குமார் குற்றஞ்சாட்டினார்.
இந்த நிலையில், தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலளித்த பி.ஆர்.கவாய், தான் கூறிய சில விஷயங்கள், சமூக வலைதளங்களில் திரித்து கூறப்பட்டிருப்பதாக தெரிவித்தார். தான் அனைத்து மதங்களை நம்புவதாகவும், மதிப்பதாகவும் விளக்கம் அளித்தார்.