இந்திய அணி வீரர்கள், பாகிஸ்தான் வீரர்களிடம் கைகுலுக்க மறுத்த விவகாரம் பெரும் சர்ச்சையாக மாறியது.
இதற்குப் போட்டி நடுவர் ஆண்டி பைகிராஃப்ட் மன்னிப்பு கேட்டதாகத் தவறாக சித்தரித்துப் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வீடியோ வெளியிட்டிருப்பது பேசு பொருளாகியுள்ளது.
ஆசியக்கோப்பை தொடரில் கடந்த 14ம் தேதி துபாயில் நடந்த போட்டியில் பாகிஸ்தானை எளிதாக வீழ்த்தி இமாலய வெற்றிப் பெற்றது இந்தியா.
போட்டிக்கு முன்னதாகவோ, போட்டிக்குப் பிறகோ இரு அணி வீரர்களுக்கும் ஒருவருக்கொருவர் கைகுலுக்கவில்லை… டாஸ் போடும்போது, போட்டி அம்பயர் ஆண்டி பைகிராஃப்ட் கைகுலுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதாகப் பாகிஸ்தான் அணி குற்றம்சாட்டியது.
இந்நிலையில், ஆசிய கோப்பையின் சர்ச்சை நாயகனான ஜிம்பாப்வே முன்னாள் வீரரும் ஆசிய கோப்பை ஐசிசி அம்பயருமான ஆண்டி பைகிராப்ட், பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா மற்றும் அணி மேலாளரிடம் மன்னிப்புக் கேட்டதாகப் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
அத்துடன் செப்டம்பர் 14ம் தேதி நடந்த சம்பவம் தொடர்பாக நடத்தை விதிகள் மீறப்பட்டதா என்பதை விசாரிக்க ஐசிசி விருப்பம் தெரிவித்தது என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அறிக்கை கூறியது.
இந்த அறிக்கையுடன் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா மற்றும் பயிற்சியாளர் ஹெசன் உடன் பைகிராப்ட் பேசிய வீடியோவையும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எக்ஸ் தளத்தில் பகிர்ந்தது.
ஆனால் பாகிஸ்தான் கூற்றுக்களை ஐசிசி வட்டாரங்கள் மறுத்துள்ளன. கைலுக்கலை நிறுத்திய காரணத்திற்காகப் பாகிஸ்தான் கேப்டனிடமோ அல்லது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடமோ பைகிராஃப்ட் மன்னப்பு கோரவில்லை என்றும், தவறான தகவல் தொடர்புக்காக மட்டுமே அவர் வருத்தம் தெரிவித்திருந்தார் என்றும் தெளிவுபடுத்தியுள்ளது ஐசிசி.
அம்பயர் ஆண்டி பைகிராஃப்ட், ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் வழிகாட்டுதல்படியே செயல்பட்டுள்ளதால், அவர் மீது எந்தத் தவறும் இல்லை என்றும், இந்த விஷயத்தில் ஆண்டி பைகிராஃபட் குற்றவாளி அல்ல என்றும் ஐசிசி தெளிவுபடுத்தியுள்ளது. இருப்பினும் தவறான தகவல் தொடர்புக்கான பொறுப்பு ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் அரங்க மேலாளரிடம் உள்ளதாகவும் விளக்கம் அளித்துள்ளது.
கைகுலுக்கல் விவகாரத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விசாரணை கோருவது ஒருபக்கம் இருந்தாலும், தகுந்த ஆதாரங்களை வழங்கினால் மட்டுமே எந்தவொரு விசாரணையும் நடைபெறும் என ஐசிசி வட்டாரங்கள் கூறுகின்றன.
இந்தியா – பாகிஸ்தான் போட்டியின்போது கைகுலுக்க வேண்டாம் என்ற கொள்கை பற்றி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நன்கு அறிந்திருந்ததாகவும், இருப்பினும் இந்த நாடகத்தை ஏன் உருவாக்கியது என்ற கேள்வியும் முன்வைக்கப்பட்டுள்ளது.
















