திருப்பூர் மாவட்டம் கரைப்புதூரில் உள்ள 650 ஏக்கர் நிலம், இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமானது என்ற அறிவிப்பால் நூற்றுக்கணக்கான மக்கள் சொத்துரிமையை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
கரைப்புதூர் கிராமத்தில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், கடந்த மாதம் 26-ம் தேதி அறநிலையத்துறை சார்பில் அப்பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான மக்களுக்கு, ஆணை ஒன்று அனுப்பி வைக்கப்பட்டது.
அதில், தங்களது நிலம் அறநிலையத்துறைக்குச் சொந்தமானது என்பதால் அவற்றை பத்திரப்பதிவு செய்யக்கூடாது எனக் குறிப்பிட்டிருந்தது.
மேலும், சம்மந்தப்பட்ட 650 ஏக்கர் நிலம் ஜீரோ மதிப்பிலானது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள், நிலங்களை விற்கவோ, வாங்கவோ முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இதை எதிர்த்து போராட்டம் நடத்த போவதாக முடிவு செய்த மக்கள், விலைக் கொடுத்து வாங்கிய நிலங்களை அரசு உரிமை கொண்டாடுவது சட்டவிரோதம் எனக் குற்றஞ்சாட்டியுள்ளனர்.